

மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்குள்ளும் மக்கள் செல்லவும், சரக்கு வாகனங்கள் செல்லவும் இ-பாஸ் முறை கூடாது. எந்தத் தடையும் இல்லாமல் செல்ல உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது அதன்பின் படிப்படியாக நீட்டிக்கப்பட்டு மே 31-ம் தேதி வரை கொண்டுவரப்பட்டது.
ஊரடங்கு முடிந்து, தற்போது ஊரடங்கு தளர்த்தும் முறையைச் செயல்படுத்தி வருகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் அன்-லாக் செயல்முறை செயல்படுத்தப்பட்டு தற்போது 3-வது அன்-லாக் செயல்முறை நடைமுறையில் இருக்கிறது.
இருப்பினும் இன்னும் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் குறையாததால், அந்தந்த மாநில அரசுகள் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகின்றன. மேலும், மாவட்டங்களுக்கு இடையே செல்லவும், மாநிலங்களுக்கு இடையே செல்லவும் இ-பாஸ் முறையை மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன.
இந்த இ-பாஸ் முறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால், பல்வேறு சிரமங்களுக்கு மக்களும் ஆளாகி வருகின்றனர். வாடகை கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலரும் இ-பாஸ் கிடைக்காமல் தொழில் இல்லாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்குள்ளும் மக்களும், சரக்குப் போக்குவரத்தும் செல்ல எந்தவிதமான தடையும் விதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் மக்களும், சரக்குப் போக்குவரத்தும் சென்று வருவதற்கு பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதிப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
நாம் தற்போது அன்-லாக் 3 செயல்முறையில் இருந்து வருகிறோம் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். மாநிலங்களுக்கு இடையே சரக்குப் போக்குவரத்து செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதித்தால், சப்ளை தொடர் சங்கியில் பெரும் சிக்கலை உருவாக்கும். வேலைவாய்ப்பிலும், பொருளாதாரச் செயல்பாட்டிலும் பெரும் தொந்தரவுகளை உண்டாக்கும்.
ஆதலால், மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்குள்ளும் மக்களும், சரக்குப் போக்குவரத்தும் செல்வதற்கு எந்தவிதமான தடையும் விதிக்கக் கூடாது.
சரக்குகளை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்லவும், மாநிலத்துக்குள்ளே கொண்டு செல்லவும், எல்லை வழியாக அண்டை நாடுகளுக்குச் செல்லவும் எந்தவிதமான ஒப்புதலோ அல்லது இ-பெர்மிட்டோ தேவையில்லை.
அதேபோல, மக்களும் மாநிலங்களுக்கு இடையே செல்லவும் மாநிலத்துக்குள்ளே செல்லவும் முன் அனுமதியோ, இ-பாஸ் முறையோ தேவையில்லை என்பது வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மக்கள் செல்லவும், சரக்குப் போக்குவரத்து செல்லவும் தடையோ அல்லது கட்டுப்பாடுகளோ விதித்தால், அது உள்துறை அமைச்சகம் பிறப்பித்த தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை மீறுவதாகும். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அன்-லாக் செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும்''.
இவ்வாறு அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.