

டெல்லியில் உள்ள ரிட்ஜ் சாலைப் பகுதியில் நேற்று இரவு சிறிய துப்பாக்கிச் சூட்டுக்குப்பின், பயங்கர வெடிமருந்துகள், ஆயுதங்களுடன் ஐஎஸ் தீவிரவாதி எனச் சந்தேகப்படும் நபரை போலீஸார் கைது செய்தனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகப்படும் நபர் நேற்று கைது செய்யப்பட்டதையடுத்து, உத்தரப் பிரதேசம், டெல்லி, உ.பி. தேசிய நெடுஞ்சாலை உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவின் துணை ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாஹா நிருபர்களிடம் கூறுகையில், “டெல்லியில் உள்ள தவுலா குவான் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதியுடன் தொடர்புடைய தீவிரவாதி ஒருவர் இருப்பதாகத் தகவல் கிடைத்து அந்த இடத்துக்குச் சென்றோம். அங்கிருந்த நபர் தப்பிக்க முயன்றபோது சிறிய துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரைக் கைது செய்தோம்.
அவரின் பெயர் அபு யூசுப். அவரிடம் இருந்து 2 பிரஷர் குக்கர், 15 கிலோ சக்தி வாய்ந்த ஐஇடி வெடிமருந்து, கைத்துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஐஎஸ் தீவிரவாதியுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
டெல்லியில் பல்வேறு இடங்களை அபு யூசுப் சுற்றிப் பார்த்துள்ளார். ஐஎஸ் தீவிரவாதிகள் தனிஆளாக நடத்தும் (ஒல்ப் அட்டாக்) தாக்குதலை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார் எனச் சந்தேகிக்கிறோம்.
கைது செய்யப்பட்ட அபு யூசுப் உத்தரப் பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் உ.பி. நம்பர் பிளேட் எனத் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, நொய்டா, டெல்லி, உ.பி. காஜியாபாத் உள்ளிட்ட 6 நகரங்களில் என்எஸ்ஜி படையினர் தேடுதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட அபு யூசுப் சென்ற இடங்களான ரிட்ஜ் சாலையில் இருக்கும் புத்தா ஜெயந்தி பார்க் பகுதியில் என்எஸ்ஜி கமாண்டர்கள் வெடிகுண்டு இருக்கிறதா எனச் சோதனை நடத்தினர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உ.பி. மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் இருக்குமாறு உ.பி. மாநில காவல் டிஜிபி ஹிதேஷ் சந்திர அவஸ்தி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் தீவிரமாகப் பரிசோதனை செய்யப்படுகின்றன. குறிப்பாக கவுதம் புத்தா நகர் தீவிரமாக உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மருத்துவர் அப்துர் ரஹ்மானை என்ஐஏ அமைப்பினர் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.