

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் குடும்ப மோதல், அரசியல் பகையாக மாறிவிடும் போல் உள்ளது. லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை எதிர்த்து அவரது மனைவியான ஐஸ்வர்யா ராய் பிஹார் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
தேஜ் பிரதாப்பிற்கு முன்னாள் எம்எல்ஏவான சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யாராயுடன் கடந்த ஏப்ரல் 18, 2018இல் திருமணம் நடைபெற்றது. அடுத்த ஐந்து மாதங்களில் மோதலுக்குள்ளான தம்பதிகள் விவாகரத்து கேட்டு பாட்னா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
கணவர் தேஜ், மாமியார் ராப்ரி தேவி, நாத்தனார் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது குடும்ப வன்கொடுமை வழக்கையும் ஐஸ்வர்யா ராய் பதிவு செய்துள்ளார். லாலு குடும்பத்தில் உருவான மோதல், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் குடும்பப் பகையாக மாறிக் கொண்டிருக்கிறது.
ஆறு முறை எம்எல்ஏவாக இருந்த சந்திரிகா ராய், முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியில் இணைந்துள்ளார். இதனால், தனது மகள் ஐஸ்வார்யாவையும் கட்சியில் சேர்த்து அவரை பிஹார் தேர்தலில் போட்டியிட வைக்க உள்ளார் சந்திரிகா ராய்.
இதில், தம் கணவர் தேஜ் பிரதாப்பை எதிர்த்து ஐஸ்வர்யா ராய் மஹுவா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இவர், தேஜின் இளைய சகோதரரான தேஜஸ்வீ பிரசாத் யாதவையும் எதிர்த்து இரண்டாவது தொகுதியாக ரகோபூரில் ஐஸ்வர்யா போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.
இதனால், லாலு குடும்பத்தின் மோதல் அரசியல் மோதலாக உருவெடுத்துவிட்டது. இதை ஏற்கெனவே எதிர்பார்த்த தேஜஸ்வீ, ஐஸ்வர்யா ராயின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பான டாக்டர் கரிஷ்மா ராயை கடந்த மாதம் தன் கட்சியில் சேர்த்திருந்தார்.
ஐஸ்வர்யா ராயை எதிர்த்து கரிஷ்மாவை போட்டியிட வைக்கவும் தேஜஸ்வீ திட்டமிட்டுள்ளார். இந்த மோதலை அரசியல் லாபமாக்கும் ஆளும் கூட்டணிக் கட்சியான ஜேடியூ, தம் குடும்பத்தையே சமாளிக்க முடியாத லாலுவா பிஹாரை சமாளிக்கப் போகிறார்? எனக் கேள்வி எழுப்ப பிரச்சாரம் செய்யத் தயாராகிறது.
இந்நிலையில், லாலு தலைமையிலான மெகா கூட்டணியின் தலித் ஆதரவுத் தலைவரான ஜிதன்ராம் மாஞ்சி தம் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார். இதில், தமக்குக் கூடுதலான தொகுதிகள் ஒதுக்காவிடில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு தாவி விடுவதாக மிரட்டுவது தொடர்கிறது.
இதனிடையே, மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்கவும் ஆலோசித்து வருகிறது. இதனால், சிறையில் இருக்கும் லாலுவிற்கு ஓரிரு மாதங்களில் வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நெருக்கடி அதிகரித்துள்ளது.