44 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தயாரிக்க விடுக்கப்பட்ட டெண்டர் ரத்து: சீன நிறுவனம் முக்கிய போட்டியாளராகப் பங்கேற்றதால் ரயில்வே அதிரடி முடிவு

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் : கோப்புப்படம்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் : கோப்புப்படம்
Updated on
2 min read

44 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில்களை தயாரிக்க கடந்த ஆண்டு விடுக்கப்பட்ட டெண்டரில் முக்கியப் போட்டியாளராக சீனாவைச் சேர்ந்த நிறுவனம் பங்கேற்றதால், டெண்டரை அதிரடியாக ரயில்வே துறை ரத்து செய்துள்ளது.

டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கான எந்தவிதமான காரணத்தையும் ரயில்வே துறை தெரிவிக்கவில்லை.

16 பெட்டிகள் கொண்ட 44 வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரிக்க கடந்த ஆண்டு ஜூலை 10-ம் தேதி சென்னை ஐசிஎப் சார்பில் டெண்டர் விடுக்கப்பட்டது.

இதில் குருகிராம் நகரைச் சேர்ந்த பயோனீர் பில் நிறுவனத்துடன் இணைந்து சீனாவைச் சேர்ந்த சிஆர்ஆர்சி யாங்ஜி எலெக்ட்ரிக் கம்பெனி லிமிட் உள்பட 6 நிறுவனங்கள் பங்கேற்றிருந்ததன.

மேலும், பாரத் ஹெவி எலெக்ட்ரானிக்ஸ் லிமிட், சாங்ரூர், எலெக்ட்ரோவேவ்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட், மேதா சர்வோ டிரைவஸ் பிரைவேட் லிமிட், பவர்நெட்டிக்ஸ் எக்குயிப்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிட் ஆகிய உள்நாட்டு நிறுவனங்களும் டெண்டரில் பங்கேற்றன.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் சார்பில் நேற்று இரவு ட்விட்டரில் பதிவிடப்பட்ட செய்தியில் “ 44 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரிக்க விடுக்கப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து திருத்தப்பட்ட கொள்முதல் விதிகள்படி அடுத்த ஒரு வாரத்துக்குள் புதிய டெண்டர் விடுக்கப்படும்”எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை அதிகாரபூர்வமாக ரயில்வே தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்த வந்தபாரத் ரயில்கள் அனைத்தையும் மேக் இன் இந்தியா திட்டத்தில் செயல்படுத்த முடிவு செய்திருப்பதால், வெளிநாட்டு நிறுவனம் (சீன நிறுவனம்) டெண்டரில் பங்கேற்பதை அரசு விரும்பவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீனா ராணுவத்துக்கு இடையே கடந்த ஜூன் 15-ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப்பின் சீனாவுக்கு மறைமுகமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

டிக்டாக் உள்ளிட்ட 105 சீன செல்போன் செயலிகளை இந்தியாவில் தடை செய்து மத்தியஅரசு உத்தரவிட்டது. ரயில்வே துறையில் தெர்மல் கேமிரா வழங்க சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

ரூ.470 கோடி மதிப்பில் சரக்குப் போக்குவரத்துக்காக சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரயில்வே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அனைத்து இந்தியவர்த்தகர்கள் கூட்டமைப்பு சமீபத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில் 44 வந்தே பாரத் ரயில்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

பிரதமர் மோடியால் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி புதுடெல்லி, வாரணாசி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைத்தார். புதுடெல்லி, ஸ்ரீ மாதா வைஷ்ணவதேவி இடையே 2-வது ரயிலை கடந்த 2019, அக்டோபர் 3-ம்தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in