திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி குழுமத்தின் பராமரிப்புக்கு அளித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு

கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்
கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்
Updated on
2 min read


திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்துக்கு ஏலத்தில் மத்திய அரசு அளித்த முடிவை செயல்படுத்த , தடைவிதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஏற்கெனவே அதானி குழுமம், லக்னோ, அகமதாபாத், மங்களூரு ஆகிய விமானநிலையங்களை கடந்த 2019-ம் ஆண்டு முதல் பராமரித்து வரும் நிலையில் கூடுதலாக 3 விமான நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் எனக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேலும், கேரள அரசு சார்பில் நேற்றுமுன்தினம் திடீரென அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பாஜக மட்டும் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், அதானி குழுமம் அளித்துள்ள அதே விலையை கேரள அரசும் தயாராக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் கேரள அரசு சட்டரீதியாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். வரும் 24-ம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டி மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டது.

இது தவிர 2-வது முறையாக பிரதமர் மோடிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி, திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரினார்.

இந்த சூழலில் கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில், திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார்மயாக்கும் முடிவுக்கும், அடுத்த கட்ட நடிவடிக்கைகளை எடுக்கவும் தடைவிதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், " திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார்மயாக்கும் முடிவுக்கும், அடுத்த கட்ட நடிவடிக்கைகளை எடுக்கவும் தடைவிதிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஈடுசெய்ய முடியாத சேதத்தையும், கஷ்டத்தையும் கொடுத்துவிடும்.

விமாநிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும் ஏற்கெனவே ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் தனியார்மயாக்கும் முடிவை செயல்படுத்தும் முடிவுக்கு தடைவிதிக்க வேண்டும்" எனவும் தெரிவி்க்கப்பட்டது.

தனியாருக்கு விமானநிலையங்களை ஒப்படைப்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கடந்த ஆண்டு கேரள அரசு இதேபோன்று மனுத்தாக்கல் செய்தது. ஆனால், அந்த அரசியலமைப்புச் சட்டம் 226-ன்படி இந்த மனுவை விசாரிக்க முடியாது எனத் தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரி்த்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து, விசாரணைக்கு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in