தெலங்கானா மாநிலத்தில் அதிகாலை ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் விபத்து: 9 பொறியாளர்கள் உயிரிழப்பு; குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

தெலங்கானா மாநிலத்தில் அதிகாலை ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் விபத்து: 9 பொறியாளர்கள் உயிரிழப்பு; குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
Updated on
1 min read

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணைக்கட்டு அருகே உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நேரிட்ட தீ விபத்தில் 9 பொறியாளர்கள் உயிரிழந்தனர்.

ஸ்ரீசைலம் அணைக்கட்டின் தெலங்கானா பிரிவில் இடது கரை கால்வாயில் நீர்மின் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் பேனல் போர்டு பகுதியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு புகை சூழ்ந்தது. அந்த நேரத்தில் சுமார் 30 பேர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

சுரங்கப்பாதை வழியாக

உடனடியாக அங்கிருந்த பொறியாளர்கள் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள் தீ வேகமாக பரவியது. இதனிடையே, சுமார் 15 ஊழியர்கள் சுரங்கப்பாதை வழியாக சிறு காயங்களுடன் வெளியே ஓடி வந்து தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேலும் 6 பேரை உயிருடன் மீட்டனர்.
இந்நிலையில், அங்கு பணிபுரிந்த 9 பொறியாளர்கள் நீர்மின் நிலையத்துக்கு உள்ளேயே சிக்கிக் கொண்டனர். புகை மூட்டம் காரணமாக தீயணைப்புப் படையினரால் உள்ளே செல்ல முடியவில்லை. இந்த சூழலில், நேற்று அதிகாலை முதல் மீண்டும் மீட்புப் பணிகள் தொடர்ந்தது. அப்போது, உதவிப் பொறியாளர் சுதாகரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரைத்
தொடர்ந்து, உதவி பொறியாளர்கள் மோகன் குமார் , உஜ்மா பாத்திமா உட்பட 9 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்களின் உடல்கள் மகபூப் நகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

சிஐடி விசாரணை

தெலங்கானா மின்வாரியத் துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி, டிரான்ஸ்கோ ஜென்கோ நிர்வாக இயக்குநர் பிரபாகர் ராவ், எம்எல்ஏ
குவ்வல பால்ராஜு, நாகர் கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஷர்மன் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திலிருந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிஐடி கூடுதல் டிஜி கோவிந்த் சிங்குக்கு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஸ்ரீசைலம் நீர்மின் நிலைய தீ விபத்து குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்..

பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஸ்ரீசைலம் நீர் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in