Published : 22 Aug 2020 06:49 AM
Last Updated : 22 Aug 2020 06:49 AM

ஊரடங்கால் வேலை இழந்தோருக்கு 50% ஊதியம்: இஎஸ்ஐ மூலம் 3 மாதங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு

கரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த பணியாளர்களுக்கு உதவும் வகையில் தொழிலாளர் ஈட்டுறுதி வாரியம் (இஎஸ்ஐ) மூலம் அவர்கள் பெற்ற ஊதியத்தில் 50 சதவீத தொகையை 3 மாதங்களுக்கு வழங்குவதற்கு வகைசெய்யும் வகையில் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

கரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த அல்லது வேலை நிச்சயமற்ற சூழலில் உள்ள பணியாளர்களுக்கு இப்புதிய விதிமுறை மூலம் ஓரளவு நிவாரணம் கிடைக்கும். இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவர் என்று தெரிகிறது. ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சலுகையை அறிவிக்குமாறு பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வந்தனர்.

இரண்டு மாதங்களுக்கு அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பான நிதி ஆயோக்கும் விதிமுறைகளை தளர்த்துமாறு அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் இஎஸ்ஐ பங்களிப்பை செலுத்திய நிறுவனங்களில் பணிபுரியும்
ஊழியர்களுக்கு இந்த அலவன்ஸ் தொகை கிடைக்கும். மார்ச் 24 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையான காலத்துக்காக இந்த அலவன்ஸை பெறலாம். ஊழியர்கள் இஎஸ்ஐ உறுப்பினர்களாக 2 ஆண்டுகள் இருந்திருக்கவேண்டும். அதாவது ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2020 வரை அவர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். இந்தகால கட்டத்தில் அவர்களது பங்களிப்பு குறைந்தபட்சம் 78 நாட்களுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அக்டோபர் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் உறுப்பினர்பங்களிப்பு செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

இந்த நடவடிக்கை மூலம் 30 லட்சம் முதல் 35 லட்சம் ஊழியர்கள் பயனடைவர் என்று பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தேசிய செயல் உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அடல் பிமிட் வியாக்தி கல்யாண் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமும் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி ஊழியர்களின் தினசரி ஊதியத்தில் 25 சதவீத தொகையை அவர்களது முந்தைய இஎஸ்ஐ பங்களிப்பில் நான்கு தவணைகளின் அடிப்படையில் பெற முடியும். பணிக்காலத்தில் ஒரு முறை இத்தகைய வேலையின்மை கால அலவன்ஸை 90 நாட்களுக்குப் பெறமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அளவானது தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிவாரணம் கோரும் காலத்தில் அவர்கள் வேலையிழந்தவராக இருக்க வேண்டும். காப்பீடு கோரும் வகையிலான பணியில் அவர்கள் 2ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது.

இந்த திட்டத்தில் நிவாரணம் கோரும் கால அவகாசத்தை இஎஸ்ஐசி ஜூன் 30, 2021 வரை நீட்டித்துள்ளது. இந்த முடிவானது மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x