

சோம்நாத் பாரதியால் ஆம் ஆத்மி கட்சிக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உடனடியாக போலீஸில் சரணடைய வேண்டும் என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சோம்நாத் பாரதி விவகாரத்தில் கேஜ்ரிவால் இதுவரை மவுனம் காத்து வந்தார். இந்நிலையில் முதன்முறையாக தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், “சோம்நாத் பாரதி உடனடியாக போலீஸில் சரணடைய வேண்டும். அவர் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? சிறை செல்ல அவர் பயப்படுவது ஏன்? அவரால் கட்சிக்கும் அவரது குடும்பத்துக்கும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீஸுக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கேஜ்ரிவாலுக்கு லிபிகா நன்றி
கேஜ்ரிவாலின் இந்தக் கருத்து தொடர்பாக சோம்நாத் பாரதி மனைவி லிபிகா கூறும்போது, “எனது கணவர் மீது நான் புகார் கூறிய நிலையில் இதுவரை அமைதியாக இருந்துவந்த கேஜ்ரிவால், இப்போது அவர் சரணடைய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்காக அவருக்கு எனது நன்றி” என்றார்.
சோம்நாத் பாரதி, தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கொல்ல முயன்றதாகவும் அவரது மனைவி லிபிகா மித்ரா டெல்லி போலீஸில் புகார் செய்தார். இதன் அடிப்படையில், பாரதி மீது குடும்ப வன்முறை, கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், பாரதியின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள பாரதியை போலிஸார் தேடி வருகின்றனர்.