

சமூகவலைத்தளத்தை தவறாகப் பயன்படுத்தியது, சில பாஜக தலைவர்களின் வெறுப்புப்பேச்சுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக விவாதிக்க செப்டம்பர் 2-ம் தேதி நேரில் ஆஜராகக் கோரி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியது.
ஜம்மு காஷ்மீரில் இன்டர்நெட் இணைப்பு வழங்காமல் இருப்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக செப்டம்பர் 1-ம் தேதி ஜம்மு காஷ்மீர் நிர்வாக பிரதிநிதிகள், உள்ளிட்டோர் நேரில் ஆஜராகவும், தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு கடந்த 14-ம் தேதி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
அதில், இந்தியாவில் உள்ள ஃபேஸ்புக் நிர்வாகம் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலர் பேசும் வெறுப்புப் பேச்சுகளை வேண்டுமென்றே தடை செய்வதில்லை, கண்டுகொள்வதில்லை.
இதற்கு இந்திய ஃபேஸ்புக் நிர்வாகத்தில் இருக்கும் அன்கி தாஸ் பின்னணியில் இருக்கிறார் என்று தெரிவித்தது.
இதையடுத்து, தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக இருக்கும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், இதற்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே எதிர்ப்புத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற நிலைக்குழுவை அரசியல்நோக்கத்துக்காக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பயன்படுத்துகிறார், அவரை நிலைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரம் இரு எம்.பி.க்களுக்கும் இடையே பெரும் வார்த்தை மோதலாக உருவெடுத்து, இருவரும் ஒருவருக்கொருவர் உரிமைமீறல் பிரச்சினையை நாடாளுமன்றதுத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சூழலில் வரும் செப்டம்பர் 2-ம் தேதி தகவல்தொழி்ல்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஃபேஸ்புக் நிறுவனம் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சமூக ஊடகங்கள், ஆன்லைன் செய்தி ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் டிஜிட்டல் தளத்தில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்க இருப்பதால், நேரில் ஆஜராகக் கோரி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மக்களவைச் செயலாளர் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.