Published : 21 Aug 2020 06:55 AM
Last Updated : 21 Aug 2020 06:55 AM

குதிரையில் நகர்வலம் வந்த அரசு ஊழியர்; ஆந்திராவில் போலீஸ் சோதனையில் 2.42 கிலோ தங்கம், 84 கிலோ வெள்ளி பறிமுதல்: பினாமியாக இருந்த கார் ஓட்டுநரின் மாமனார் வீட்டில் சிக்கின

ஆந்திர மாநிலத்தில் சாதாரண அரசு ஊழியர் ஒருவர் திடீரென ஆடம்பரத்துக்கு மாறினார். சந்தேகத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் லட்சக்கணக்கில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பைக், கார்கள், சேமிப்பு பத்திரங்கள், துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் சாய் நகர் பகுதியில் வசிப்பவர் மனோஜ் குமார். இவர் அனந்தபூரில் உள்ள அரசு கஜானாத் துறையில் சீனியர் அக்கவுன்டன்டாக பணியாற்றுகிறார். இவர் சமீப காலமாக குதிரையில் வலம் வருவதும், அடிக்கடி புத்தம் புது கார்கள், விலையுயர்ந்த பைக்குகளில் ஊர் சுற்றுவதுமாக இருந்தார். மேலும், சட்டத்தை மீறி பணம் சம்பாதிப்பதாக இவர் மீது புகார்கள் எழுந்தன.

இவரது பினாமியாக செயல்பட்டு வந்த கார் ஓட்டுநர் நாகலிங்கத்தை சில நாட்களாக போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில், திடீரென புக்கராய சமுந்திரம் பகுதியில் உள்ள நாகலிங்கத்தின் வீட்டில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அவர் கொடுத்த தகவல்களின்படி, அப்பகுதில் உள்ள நாகலிங்கத்தின் மாமனார் வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கு, பழங்கால ‘டிரங்’ பெட்டிகளில் நகைகளும், வெள்ளி பாத்திரங்களும், பல்வேறு பத்திரங்களும் இருப்பதை கண்டு போலீஸார் ஆச்சரியப்பட்டனர்.

பின்னர் விடிய, விடிய சோதனை செய்ததில், 2.42 கிலோ தங்க நகைகள், 84.10 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.15 லட்சத்து 55,560 ரொக்கம், ரூ.49.10 லட்சத்துக்கான பிக்சட் டெபாசிட் பத்திரங்கள், ரூ.27.05 லட்சம் மதிப்புள்ள சில சேமிப்பு பத்திரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கிகள் பறிமுதல்

தவிர, 2 கார்கள், 7 பைக்குகள், 4 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். இதில் 3 விலையுயர்ந்த வெளிநாட்டு பைக்குகள் இருந்தன. மேலும், 3 துப்பாக்கிகள், தோட்டாக்களும், ஒரு ஹேர் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் அனந்தபூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x