ராமர் கோயில் கட்ட தாமிரம் வழங்க வேண்டுகோள்

ராமர் கோயில் கட்ட தாமிரம் வழங்க வேண்டுகோள்
Updated on
1 min read

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில்,கோயில் கட்டும் பணியை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தியாவின் பழங்கால கட்டுமான உத்திகளைப் பயன்படுத்தி கோயில் கட்டப்படும். நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் கோயில் அமையும். கட்டுமானப் பணியில் இரும்பு பயன்படுத்தப்படாது. கோயில் அமைந்துள்ள இடத்தில் மண் பரிசோதனையில் மத்திய கட்டுமான ஆய்வு நிறுவனம், சென்னை ஐஐடி, எல் அண்டு டி பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் வகையில் கற்களுடன் தாமிரத் தகடுகளை இணைத்து கோயில் கட்டப்படும். கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்படும் தாமிரத் தகடுகள் 18 அங்குள நீளம், 30 மிமி அகலம் மற்றும் 3 மிமி ஆழம் கொண்டதாக இருக்க வேண்டும். ராம பக்தர்கள் தாமிரத் தகடுகளை அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கலாம். தாமிரத் தகடுகளை வழங்குவோர் அதில் தங்கள் குடும்பத்தினர் பெயர், ஊர், மாநிலம் போன்ற விவரங்களை பொறிக்கலாம். இது நாட்டின் ஒற்றுமையை குறிப்பதோடு ஒட்டுமொத்த நாடும் ராமர் கோயிலுக்கு பங்களிப்பு செய்துள்ளது என்பதை உணர்த்தும்.

இவ்வாறு அறக்கட்டளை கூறியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in