Published : 20 Aug 2020 08:48 PM
Last Updated : 20 Aug 2020 08:48 PM

இந்தியா ஊரடங்கின் அர்த்தத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டி உள்ளது: பியூஷ் கோயல் பெருமிதம்

இந்தியா முழுமையான ஊரடங்கின் அர்த்தத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டி உள்ளது, நோயில் இருந்து மிக விரைவாக குணமாவது எப்படி என்பதையும் உலகிற்கு எடுத்துகாட்டியுள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

புதுடெல்லியில் இன்று சிஐஐ-ன் 12வது மெட்டெக் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ‘‘இந்தியாவிற்கும் உலகத்திற்கும் போதுமான மருந்துகளை விநியோகிப்பதை உறுதி செய்வதற்கு மருத்து தயாரிப்புத் தொழில் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

கோவிட்-19க்கு எதிராகப் போராடுவதற்கு நமக்குத் தேவையான உள்நாட்டிலேயே தயாரித்த பொருள்களைப் பெறுவதற்கு மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புத் தொழிற்சாலை உதவியுள்ளது. நமது மருத்துவர்கள், துணை-மருத்துவப் பணியாளர்கள், மருத்துவச் சமுதாயத்தினர் அனைவரும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கத்தில் தாங்கள் ஏற்றுக்கொண்ட கடமையை நிறைவேற்றும் வகையில் சாதாரண மனிதர்களுக்கும் தொடர்ச்சியான சேவை செய்து வருவதன் மூலம் நாட்டைப் பெருமைக் கொள்ளச் செய்துள்ளனர்.

‘‘இந்தியா முழுமையான ஊரடங்கின் அர்த்தத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டி உள்ளது. நோயில் இருந்து மிக விரைவாக குணமாவது எப்படி என்பதையும் உலகிற்கு எடுத்துகாட்டியுள்ளது என்று நாம் இப்போது பெருமையுடன் கூற முடியும்’’ என கோயல் தெரிவித்தார். ”கோவிட்-19 நோயாளிகள் குணமடையும் எண்ணிக்கை என்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. குணமடையும் விகிதம் 70 சதவீதத்தைத் தாண்டி உள்ளது. இந்தக் காலகட்டம் நம் அனைவருக்கும் கற்றுக் கொள்வதற்கான சிறந்த காலகட்டமாக உள்ளது” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் உரையாற்றிய பிரதமர் சுயசார்பு இந்தியா குறித்த தொலைநோக்குப் பார்வையைத் தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவத்துறை நிபுணர்கள் ஆற்றிய சிறப்பான பங்கினையும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார். இவற்றைச் சுட்டிக்காட்டிய கோயல் நமது சுகாதார அமைப்பை தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம் 3ஏ – அணுகுதல், விழிப்புணர்வு மற்றும் சேவை கிடைத்தல் உதவியுடன் புதுப்பித்துக் கொள்வதற்கு இதுவே சரியான தருணம் என்று தெரிவித்தார். மக்களின் வாழ்வைப் பராமரிப்பதற்கு சுயசார்பு மிக முக்கியமானது என்ற புரிதலுடன் நமது மருந்துப் பொருள் தயாரிப்பாளர்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பாளர்கள், மருத்துவத் துறையினர் இனி செயல்படுவார்கள் என கோயல் மேலும் தெரிவித்தார்.

‘‘தற்போது உலகத்தின் மருந்து நிலையமாக உள்ள நாம் உலகின் மருத்தவமனையாகவும் மாற வேண்டும். இந்தியா உலகின் பிற பகுதிகளுக்கு வழங்க இருக்கும் மருத்துவ வசதிகள், உயர்தரமான மருத்துவப் பராமரிப்பு மற்றும் உயர்தரமான சிகிச்சை ஆகியவற்றை இனி உலகம் பயன்படுத்தும். மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புத் தொழில்கள் இந்தியாவிற்கு தொழில்நுட்பங்களைக் கொண்டு வருவதில் முன்னணியில் இருக்கின்றன. மருத்துவ உபகரணங்களுக்கான சர்வதேச வர்த்தகத்தில் நம்முடைய சரியான இடத்தை அவை உறுதி செய்கின்றன. மேலும் சர்வதேச அளவில் மருத்துவமனைகளோடு உலகளாவிய பங்கேற்புக்கும் அவை உதவுகின்றன’’ என அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x