Last Updated : 20 Aug, 2020 06:00 PM

 

Published : 20 Aug 2020 06:00 PM
Last Updated : 20 Aug 2020 06:00 PM

பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி மூலம், கடந்த 6 ஆண்டுகளாக அமைப்பு சாரா பொருளாதாரத்தை மோடி அரசு அழித்துவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

ராய்ப்பூர்


பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி கொள்கை மூலம் கடந்த 6 ஆண்டுகளாக அமைப்புசாரா பொரளாதாரத்துக்கும், அமைப்பு சார்ந்த பொருளாதாரத்துக்கும் இடையிலான சமநிலையை மோடி அரசு அழித்துவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 22 மாவட்டங்களில் காங்கிரஸ் அலுவலகம் புதிதாக கட்டப்படப்பட உள்ளது. அதற்கான நிகழ்ச்சி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளான இன்று நடந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி காணொலி மூலம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் இரு வகையான பொருளாதாரம் இருக்கிறது. ஒன்ரு அமைப்பு சாரா பொருளாதாரம், மற்றொன்று அமைப்பு சார்ந்த பொருளாதாரம்.

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுவணிகர்கள், லட்சக்கணக்கான ஏழை மக்கள் கொண்ட அமைப்புச்சாரா பொருளாதாரம்தான், நாட்டில் 90 சதவீதம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிறது. அமைப்பு சார்ந்த பொருளாதாரத்தில் பெரிய நிறுவனங்கள், முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்கும்.
ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 6 ஆண்டுகளாக அமைப்புசாரா பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட்டது.

ஏனென்றால், இந்த அமைப்பு சாரா பொருளாதாரத்தில் அதிகமான பணம் இருக்கிறது, அதை தன்னுடைய பணக்கார நண்பர்களுக்காக மாற்ற மோடி விரும்பினார். நாட்டில் உள்ள இளைஞர்களுக்குகூட புதிதாக வேலைவாய்ப்பை உருவாக்கித் தரமுடியாத சூழலில்தான் இருக்கிறது.

எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் அரசு இருக்கிறதோ அங்கு அமைப்பு சாரா மற்றும் அமைப்பு சார்ந்த பொருளாதாரத்துக்கு இடையே சமநிலையை உருவாக்க முயன்று வருகிறது. எதிர்பாராத அசாதாரா சழலில் அதிர்வுகளையும், பேரிடர்களையும் தாங்கும் கருவியாக அமைப்புசாரா பொருளாதாரம் இருக்கிறது.

ஒருநாட்டின் அமைப்புசாரா பொருளாதாரம் வலிமையாக பாதுகாப்பாக இருந்தால், எந்தவிதமான கடினமான சூழலையும் எதிர்கொள்ள முடியும், சமாளிக்க முடியும். வீட்டில் நம்முடைய அம்மா, சகோதாிகள் சிறுசேமிப்பு வைத்திருப்பார்கள். அந்த சேமிப்புதான் அவசரநேரத்தில், கடினமான நேரத்தில் நம்மை தாங்கிப்பிடிக்கும். அதுபோலத்தான் அமைப்புசாராப் பொருளாதாரமும்.

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான, குழப்பமான ஜிஎஸ்டி கொள்கையால் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு, நடுத்தர தொழில்கள் அழிந்துவிட்டன. அமைப்புசாரா பொருளாதாரத்தின் மீது விழுந்த முதல்தாக்குதல் என்பது பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்ததுதான்.

மக்கள் தாங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்து வங்கியில் சேர்த்த பணத்தை 10 முதல் 15 பணக்கார தொழிலதிபர்கள் நண்பர்களுக்கு கடன் கொடுத்து அதை தள்ளுபடி செய்தார்கள். முதலாளிகளுடன் அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படும் சூழல் ஏற்பட்டது.

அதுமட்டுல்லாமல், தவறான ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்து சிறு, நடுத்தர தொழில்களையும், விவசாயிகளையும் சீர்குலைத்துவிட்டார்கள்.

கரோனா காலத்தில் , எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி திடீரென மோடி, நாடுமுழுவதும் ஊரடங்கை அறிவித்தார். ஏன் இதை திடீரென அறிவித்தார். இதற்கு பின்னணி. நம்முடைய அமைப்புசாரா பொருளாதாரம்தான் இலக்கு

90 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமைப்புசாரா பொருளாதாரத்தை மோடி கடந்த 6 ஆண்டுகளாக அழித்துவிட்டார். ஒன்றன்பின் ஒன்றாக நிறுவனங்கள் வீழ்ந்து வருகின்றன, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சீர்குலைந்து வருவது ஏற்கெனவே தொடங்கி நடந்து வருகிறது.

இந்த தேசத்தால் வரும்காலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முடியாது. இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக , நமது தேசம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாத சூழல் எதிர்காலத்தில் வரும்.ஏனென்றால், சிறு, நடுத்தர தொழில்கள் அழிக்கப்படும்.

காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க உழைக்க வேண்டும், பிரிக்க முயலக்கூடாது. ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். அமைப்பு சாரா, அமைப்பு சார்ந்த பொருளாதாரத்துக்கு இடையிலான சமநிலையை மீண்டும் கொண்டுவருவது அவசியம். அது நம்முடைய கடமையாகும்.

எங்கெல்காம் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மக்களுக்கு இடையே வெறுப்பை விதைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறார்களோ அங்கு ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x