

நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அவமதிப்பு கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க மறுக்கும் அவரின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய 2 நாட்களில் அவகாசம் வழங்குகிறோம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதமன்றம் அளித்துள்ள ஆலோசனையை, தன்னுடைய வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு செய்கிறேன் என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண் விமர்சித்து, முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார்.
ஆனால், உண்மையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அந்த பைக்கை இயக்கவில்லை, நின்றிருந்த அந்தபைக்கில் அமர்ந்து மட்டுமே பார்த்தார், அமரும் வரை முகக்கவசம் அணிந்திருந்தார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது மட்டுமல்லாமல் நீதித்துறை குறித்தும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, பிரசாந்த் பூஷன் குற்றவாளி என கடந்த 14-ம் தேதி அறிவித்தது. தண்டனை விவரங்களை 20-ம் தேதி அறிவிப்போம் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு தண்டனை விவரங்களை அறிவிக்க இன்று கூடியது.
அப்போது பிரசாந்த் பூஷன் சார்பில் அவரின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஒரு மனுவை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.
அதில், “ இந்த வழக்கை வேறு அமர்வு விசாரிக்க வேண்டும். நாங்கள் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக மறுஆய்வு மனுத் தாக்கல் செய்யப்போகிறோம். மறு ஆய்வு மனுவில் முடிவு எடுக்கும் வரை விசாரணையை ஒத்திவைக்க வேண்டும். தண்டனை விவரங்கள் அறிவிப்பதை ஒத்திவைத்தால் வானம் இடிந்து விழுந்துவிடாது” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி அருண் மிஸ்ரா, “ துஷ்தவே அளித்த மனுவை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், பிராசாந்த் பூஷன் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்படும் மனு மீதான விசாரணை முடிந்தபின்பே பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை நிறைவேற்றப்படும்.
தண்டனை விவரங்களுக்கு மட்டும் வேறு ஒரு அமர்வு விசாரிக்கவும் வாதிடவும் ஒரு முறையற்ற காரியத்தை எங்களைச் செய்யச் சொல்கிறீர்கள். நான் விரைவில் ஓய்வு பெறப்போகிறேன் என்பதால் இந்த வழக்கை ஒத்திவைக்க முடியாது. இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் அளிக்கப்பட்டபின், மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஆதலால், மறுஆய்வு மனுவை விசாரிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
அப்போது, அட்டர்ன்லி ஜெனரல், கே.கே. வேணுகோபால் குறுக்கிட்டு பிரசாந்த் பூஷன் வாதிடுவதற்கு வாய்ப்பு அளியுங்கள் என்று கோரினார். அதற்கு நீதிபதிகள், தொழில்முறை விதிகளை எங்களுக்கு நீங்கள் நினைவுபடுத்தாதீர்கள் எனத் தெரிவித்தனர்.
பிரசாந்த் பூஷன் வாதிடுகையில் “ நான் மொத்தமாகவே தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளேன். அவமதிப்பு வழக்கில் அறிவிக்கையின் நகல் என்னிடம் வழங்க வேண்டியது அவசியம் என்பதைக் கூட நீதிமன்றம் அறியவில்லை என்பது , எனக்கு வேதனையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க ஜனநாயகத்தில் வெளிப்படையாக விமர்சனம் செய்வது அவசியம். நான் உங்களிடம் கருணையைக் கேட்கவில்லை, பெருந்தன்மையைக் கோரவில்லை. எனக்கு நீதிமன்றம் எந்த தண்டனை விதித்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.மன்னிப்பு கோர முடியாது ” எனத் தெரிவித்தார்.
அப்போது அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், கூறுகையில் “ஏற்கெனவே இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுவிட்டதால், பிரசாந்த் பூஷனுக்கு எந்தவிதமான தண்டனையையும் அறிவிக்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்
அதற்கு நீதிபதிகள், “ பிரசாந்த் பூஷன் பேசும் தொனி, பேச்சு, உள்ளடக்கம் ஆகியவை மேலும் மோசமாக்குகிறது. இது அவரை தற்காத்துக்கொள்ளுதலா அல்லது, நிலைமையை இன்னும் மோசமாக்குகிறாரா. தவறை உணர்ந்துவிட்டதாக அறிவித்தால் எளிதாக முடிந்துவிடும். இன்னும் 2 நாட்கள் அவகாசம் தருகிறோம். அவமதிப்பு கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க மறுக்கும் அவரின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வழக்கை வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.