

அயோத்தி ராமர் கோயில் கட்டுவததற்கு கற்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன, ஆதலால், 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக ராமர் கோயில் நிலைத்திருக்கும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கடந்த 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்த்பென் படேல் பங்கேற்றனர். மேலும், 175 விஐபிக்கள், சாதுக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் சென்னை ஐஐடி மற்றும் மத்திய கட்டிட ஆய்வு நிறுவனம்(சிபிஆர்ஐ) ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதுதவிர லார்சன் அன்ட் டூப்ரோ கட்டுமான நிறுவனம் மேற்பார்வை செய்து வருகிறது. அயோத்தியில் நிலத்தில் மண்ணின் தன்மை, வலிமை, ஆகியவை குறித்து சென்னை ஐஐடி ஆய்வு செய்து வருகிறது. பூகம்பம் ஏதும் ஏற்பட்டால் தாங்கக்கூடிய அளவில் கோயிலை கட்ட சிபிஆர்ஐ அமைப்பும் இணைந்து பணியை செய்து வருகின்றன.
ஏறக்குறைய 10 ஆயிரம் செம்பு கம்பிகள் கோயிலுக்குத் தேவைப்படுகின்றனர். கோயில் கட்டுமானத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இதற்கான நன்கொடை அளிப்பார்கள்.
ராமர் கோயில் முழுமையும் கற்களால் மட்டுமே கட்டப்படுகின்றனர். இதுபோன்று கோயில் கட்டப்படும் போது காற்று, சூரியன், நீர் என எதன் மூலமும் கோயில் சேதமாகாது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் நிலைத்திருக்கும்”
இவ்வாறு சம்பத் ராய் தெரிவித்தார்.