காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்

காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஒரு ராணுவ வீரரும் பலியானார். இதுதவிர எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாரா அருகே உள்ள சொச்சல்யரி வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் பலியானார். பலியான தீவிரவாதிகளின் விவரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது கடந்த 2 நாட்களில் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த 2-வது வெற்றியாகும். நேற்று முன்தினம் பாரமுல்லா மாவட்டம் ரபியாபாத் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதியும் ஒரு வீரரும் பலியாயினர். பலியான தீவிரவாதி சோப்பூர் பகுதியில் நடைபெற்ற பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டவர் என கூறப்படுகிறது.

பாதுகாப்புத் துறையின் ஜம்மு பகுதி செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் மணீஷ் மேத்தா நேற்று கூறும்போது, “பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காட்டி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு நமது ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதில் உயிரிழப்பு எதுவும் இல்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in