Last Updated : 20 Aug, 2020 09:04 AM

 

Published : 20 Aug 2020 09:04 AM
Last Updated : 20 Aug 2020 09:04 AM

மத்திய அரசு முடிவு செய்தால், கரோனா தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதியளிக்க பரிசீலிக்கிறோம்: நாடாளுமன்ற குழுவிடம் ஐசிஎம்ஆர் தகவல்


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இரு உள்நாட்டு நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பு மருந்து 2-வது கட்ட கிளினிக்கல் நிலை முடியும் நிலையில் இருக்கிறது. மத்திய அரசு முடிவு செய்தால், அவசர அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்கிறோம் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன், ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா நேற்று கரோனா தடுப்பு மருந்துகள் குறித்து விளக்கம் அளித்தார். இந்த நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா உள்ளார்.

நிலைக்குழு முன் பல்ராம் பார்கவா அளி்த்த விளக்கம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒரு எம்.பி. கூறுகையில் “ நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா நேற்று விளக்கம் அளித்தார்.

அப்போது, அவர் கூறுகையில் “ கரோனா வைரஸுக்கு தடுப்புமருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஜைடல் கெடிலா ஆகிய உள்நாட்டு நிறுவனங்களும், செரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்தும் செயல்பட்டு வருகின்றன.

இதில் இந்திய நிறுவனங்களான பாரத் பயோடெக், ஜைடஸ் கெடிலா நிறுவனங்கள் மனிதர்களுக்கான கிளினிக்கள் பரிசோதனையின் 2-வது கட்டத்தை ஏறக்குறைய முடிக்கும் நிலையில் இருக்கின்றன.

செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் உருவாக்கிய கரோனா தடுப்பு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 2-வது கட்டத்தை 17 மையங்களில் உள்ள 1,700 நோயாளிகளுக்கு முடிக்கும் நிலையில் இருக்கிறது எனத் தெரிவித்தார்.

அப்போது எம்.பி.க்கள், எத்தனை நாட்களுக்தான் மக்கள் கரோனாவுடன் வாழ முடியும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பல்ராம் பார்கவா அளித்த பதிலில் “ பொதுவாக 3-வது கிளினிக்கல் பரிசோதனைதான் நீண்டகாலம் எடுக்கும், ஏறக்குறைய இந்த பரிசோதனை 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கிறது. அவசரமாக தேவைப்படுகிறது என்று மத்திய அரசு முடிவு செய்தால், அவசரத்தின் காரணமாக அனுமதியளிப்பது குறித்து ஐசிஎம்ஆர் பரிசீலிக்கும் எனத் தெரிவித்தார்

அமெரிக்காவில் ஒருவரின் எச்சில் மூலம் கரோனா பரிசோதனை செய்ய அங்குள்ள எப்டிஏ அனுமதியளித்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என எம்.பி.க்கள் கேட்டனர்.

அதற்கு பல்ராம் பார்கவா பதில் அளிக்கையில் “ இந்தியாவில் ஒருவருக்கு கரோனா பரிசோதனை பிசிஆர் டெஸ்ட் மூலம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக ஒருவர் தொண்டைவரை சென்று வாய்கொப்பளித்த தண்ணீர் மூலம் கரோனா பரிசோதனை செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவித்தார்

இவ்வாறு அந்த எம்.பி. தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஐசிஎம்ஆர் செயல்பாடும், மருந்து தயாரிப்பு, அறிவியல் ரீதியான, மருத்துவ ரீதியான விஷயங்களை ஒருங்கிணைத்து செயல்படும் செயலை எம்.பி.க்கள் பாராட்டினர். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அடிக்கடி கூறும் அறிவுரைகள், வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து ஐசிஎம்ஆர் வெளியிடுவதையும் எம்.பி.க்கள் வரவேற்றனர்.

மேலும், கரோனா வைரஸால் பாதி்க்கப்பட்ட நோயாளிகளை உறவினர்களும், அண்டைவீட்டாரும் அவமரியாதையுடன் நடத்தும் முறை குறித்து பல்வேறு புகார்கள் வருகின்றன.

உண்மையில் கரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களை யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவர்கள், சமூகத்துக்கு தடுப்பு அரணாக மாறக்கூடியவர்கள் என்று எம்.பி.க்கள் பெருமையுடன் குறிப்பிட்டனர்.
கரோனா காலத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள், வீட்டிலேயே முடங்கி இருப்பவர்கள் உள்ளிட்ட பலருக்கு மனரீதியான அழுத்தங்கள் ஏற்படுகின்றன. அதைத் தீர்க்கும் வகையில் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

பள்ளிக்குழந்தைகள் நீண்ட நேரம் ஆன்-லைன்வகுப்புகளில் கணினி முன்பும், ஸ்மார்ட் போன் முன்பும் அமர்வதால் அவர்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்பு, மனரீதியான பாதிப்பு ஆகியவற்றிலிருந்து மீள்வதுகுறித்த பரிந்துரைகளை வழங்கிட வேண்டும் என எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு பதில் அளித்த ஐசிஎம்ஆர் இயக்குநர் பார்கவா, எம்.பி.க்கள் ஆலோசனையை ஏற்கிறேன். தற்போது குறிப்பிட்ட அளவுதான் ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். மனஉளைச்சல், அழுத்தம் போன்றவற்றிலிருந்து மீள்வது குறித்து விரைவில் விரிவான ஆலோசனைகள், பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x