Last Updated : 20 Aug, 2020 08:09 AM

 

Published : 20 Aug 2020 08:09 AM
Last Updated : 20 Aug 2020 08:09 AM

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கர்நாடகாவில் தந்தை சடலத்தை சைக்கிளில் கொண்டு சென்ற மகன்

கர்நாடக மாநிலம் பெலகாவி அருகேயுள்ள எம்.கே.ஹுப்பள்ளியை சேர்ந்தவர் சாதெப்பா சளகர் (71). இவருக்கு கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கிராம சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பெலகாவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். மறுநாள் அங்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே சாதெப்பா சளகர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது சடலத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

ஆனால், கரோனா அச்சத்தால் கிட்டூரில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வர மறுத்துவிட்டார். சளகரின்உறவினர்களும் அதே காரணத்தினால் அவரது உடலை பார்க்கக் கூட வரவில்லை. பெலகாவியில் பருவமழை விடாமல் பெய்ததால் உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆதலால், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உடலை விரைவில் அடக்கம் செய்யுமாறு அழுத்தம் தரப்பட்டதாக தெரிகிறது.

இதனால் வருத்தம் அடைந்த சளகரின் மகன் சோமப்பா, தன் தந்தையின் உடலை பாலித்தீன் பையால் மூடி சைக்கிளில் வைத்து 2 கிமீ தூரம் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றார். அவருக்கு உறவினர்கள் யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் நண்பர் காஞ்சப்பா இறுதிவரை உடன் இருந்துள்ளார். இருவரும் பாதுகாப்பு கவசம் அணிந்தவாறு சுடுகாட்டுக்கு கொண்டு சென்று சளகரின் உடலை அடக்கம் செய்தனர்.

தனது தந்தையின் உடலை சோமப்பா சைக்கிளில் எடுத்துச் செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், “முதல்வர் எடியூரப்பா அவர்களே உங்கள் அரசு எங்கே? உடலை கொண்டு செல்ல ஏன் ஆம்புலன்ஸ் கூட வரவில்லை? உங்கள் அரசுக்கு துளியும் மனிதநேயம் இல்லை. கரோனா தொற்றை கையாள்வதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டது” என விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x