

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வானின் கட்சிகாங்கிரஸுடன் இணைந்து 3-வது கூட்டணிக்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இக்கூட்டணியில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியும் (எல்ஜேபி) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட எல்ஜேபி விரும்புகிறது. முக்கியக்கூட்டணிக் கட்சியான பாஜகவும் அதிக தொகுதிகளுக்கு முயல்வதால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என பாஸ்வான் கருதுகிறார். இதனால், ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறி புதிதாக மூன்றாவது கூட்டணி அமைக்க பாஸ்வான் கட்சி விரும்புவதாக கூறப்படுகிறது.
பிஹாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் உள்ளார். இதனால், அவரது தலைமையிலான மெகாகூட்டணியிலும் சில சிக்கல் உருவாகி உள்ளது.
இக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ், பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் சமதா மற்றும் விகாஸ் இன்ஸான் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தலித் ஆதரவு தலைவரான ஜிதன்ராம் மாஞ்சி அதிருப்தியில் உள்ளார். இதனால், மெகா கூட்டணியில் இருந்து காங்கிரஸை பிரித்து 3-வது கூட்டணி அமைக்க ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் எம்.பி. முயற்சிப்பதாகத் தெரிகிறது.
இதற்காக சிராக், கடந்த வாரம் ஜன் அதிகார் கட்சியின் தலைவர் பப்பு யாதவை அழைத்து பேசியுள்ளார். சில காங்கிரஸ் தலைவர்களிடமும் அவர் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், தம்மை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் மூன்றாவது கூட்டணியை அமைப்பதாக சிராக் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது.
மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலுவின் மகனும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் நிறுத்தப்பட உள்ளார். இதற்கு காங்கிரஸும் சம்மதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், கடந்த காலங்களில் லாலு தலைமையிலான 15 வருட ஆட்சியால் பிஹார் வாசிகள் இன்னும் கூட அதிருப்தியில் உள்ளனர். அதேபோல, தொடர்ந்து 3-வது முறையாக ஆளும் நிதிஷ் குமாரின் ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவுவதாக கூறப்படுகிறது.