

திருவனந்தபுரம் விமானநிலையத்தை பராமரிக்க 50 ஆண்டுகள் குத்தகைக்கு அதானி குழுமத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிப்பது கடினம். பிரதமர் தலையிட்டு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்த 3 விமானநிலையங்களை இயக்குதல், பராமரித்தல், மேம்படுத்தும் பணி ஆகியவற்றை அடுத்த 50 ஆண்டுகளுக்கு செய்ய உள்ளது.
ஏற்கெனவே அதானி குழுமம், லக்னோ, அகமதாபாத், மங்களூரு ஆகிய விமானநிலையங்களை கடந்த 2019-ம் ஆண்டு முதல் பராமரித்து வரும் நிலையில் கூடுதலாக 3 விமான நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநில அரசு முன்வைத்த வலிமையான வாதங்களுக்கு நம்பிக்கை அளிக்காமல், மத்தியஅரசு தன்னிச்சையாக திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி குழுமத்திடம் 50 ஆண்டுகள் பராமரிப்பு ஒப்படைத்துள்ளது. மக்களின் நலனுக்கு விரோதமாக இருக்கும் மத்தியஅரசின் இந்த முடிவை செயல்படுத்துவதில் கேரள அரசு ஒத்துழைப்பது கடினம்.
ஆதலால், இதில் நீங்கள் தனிப்பட்ட முறையில் இந்த நேரத்தில் தலையிட்டு, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்.
விமாநிலையத்தில் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டாம், இந்த விமான நிலையத்தில் மாநில அரசு முக்கிய பங்குதாரராக இருக்கிறது என்று பலமுறை நாங்கள் கோரிக்கை விடுத்தும் அது புறந்தள்ளப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு, விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் அளித்த உத்தரவாதத்தின்படி, தனியார் துறைக்கு இந்த விமானநிலையத்தில் பங்களிப்பு செய்யப்படும் என்ற முடிவு எடுக்கும் போது, விமானநிலைய விரிவாகத்தில் மாநில அரசுக்கு இருக்கும் பங்கு குறித்து கருத்தில் கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தது.
இந்திய விமானநிலைய ஆணையத்துக்கு விமானநிலைய விரிவாகத்துக்கு 23.57 ஏக்கர் நிலத்தை கேரள அரசு இலவசமாக வழங்கி, சர்வதேச நுழைவாயிலை விரிவுபடுத்தக் கோரியது. அதேநேரம் இந்த நிலத்துக்கான மதிப்பு, கேரள அரசுக்கு பங்குமுதலீடாக இருக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு நிதிஆயோக் கூட்டத்தில்கூட அனைத்துச் செயலாளர்கள் பங்கேற்றபோது மாநில அரசு சார்பில் அனைத்து விவரங்களும், செலவு செய்யப்பட்ட தொகை விவரங்களும் முன்வைக்கப்பட்டன.
கொச்சி, கண்ணூர் விமான நிலையங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில், பராமரிக்கப்படுகின்றன. அவை சிறப்பாகவே செயல்படுகின்றன, மக்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்குகின்றன.
ஆதலால், மத்தியஅரசின் முடிவிலிருந்து திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி குழுமத்துக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.