கரோனாவைச் சமாளிக்க 2-வது கட்டமாக 100 வென்டிலேட்டர்கள்: இந்தியாவிடம் வழங்கியது அமெரிக்கா

முதல்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்க தூதரக அதிகாரிகள்: கோப்புப்படம்
முதல்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்க தூதரக அதிகாரிகள்: கோப்புப்படம்
Updated on
1 min read


கரோனா வைரஸ் பெருந்தொற்றைச் சமாளிக்கும் வகையில் 200 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு வழங்குவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதியளித்திருந்த நிலையில் 2-வது கட்டமாக 100 வென்டிலேட்டர்களே இந்தியாவிடம் இன்று அமெரிக்கா வழங்கியது.

ஏற்கெனவே முதல்கட்டமாக கடந்த ஜூன் 14-ம் தேதி 100 வென்டிலேட்டர்களை இந்தியாவிடம் அமெரிக்கா வழங்கியிருந்தது. இந்த 100 வென்டிலேட்டர்கள் நாட்டில் முக்கிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரி்க்கத் தூதர் கென்னட் ஜெஸ்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

கரோனா வைரஸ் பெருந்தொற்றைச் சமாளிக்கும் வகையி்ல 200 வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி ஏற்கெனவே 100 வென்டிலேட்டர்களை இந்தியாவிடம் வழங்கி இருந்தோம். 2-வது கட்டமாக 100 வென்டிலேட்டர்கள் இன்று வழங்கப்பட்டன.

இந்த வென்டிலேட்டர்கள் அனைத்தும் அமெரி்க்காவில் தயாரிக்கப்பட்டவை, சிறியது, எங்கும் பொருத்திக்கொள்ள முடியும். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏதுவானது.

சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பு,இந்திய செஞ்சிலுவை சங்கம், இந்திய அரசு ஆகியவற்றுடன் இணைந்து இந்த 200 வென்டிலேட்டர்களை வழங்கியுள்ளது. மேலும், இந்த வென்டிலேட்டர்களுக்குத் தேவைப்படும் டியூப்கள், பில்டர்கள், தேவையான மற்ற கருவிகளும் தேவை ஏற்படும்பட்சத்தில் வழங்கப்படும்.

இந்தியாவில் மருத்துவ சுகாதார வசதிகளை மேம்படுத்த இந்தியஅரசுடன் இணைந்து அமெரி்க்காவும் பங்களிப்பு செய்து வருகிறது. குறிப்பாக வென்டிலேட்டர்கள் வழங்குதல், பயிற்சி, கிளினிக்கல் பயிற்சி போன்றவற்றை வழங்குகிறோம்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in