கரோனா காலத்தில் தேர்தல் நடத்தும் வழிகாட்டி விதிமுறைகள் விரைவில் வெளியீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரந்த வழிக்காட்டி விதிமுறைகள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்க வேண்டியது இருப்பது அனைத்து தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் தங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், பரி்ந்துரைகளை அனுப்புமாறு தேர்தல் ஆணையம் கோரியிருந்தது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

கரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டிருந்தோம். மேலும், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் தங்கள் பரி்ந்துரைகளையும், ஆலோசனைகளையும் அளித்திருந்தனர்.

அனைவரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாகப் பரிசீலித்து அடுத்த 3 நாட்களில் தேர்தல் நடத்த விரிவான வழிகாட்டி விதிமுறைகளை வெளியிடுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஹார் மாநிலச் சட்டப்பேரவையின் காலம் நவம்பர் 29-ம் தேதிக்குள் முடிகிறது என்பதால் அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் அக்டோபர்-நவம்பரில் நடத்தப்பட வேண்டும்.

மேலும், பல்வேறு மாநிலங்களில் இடைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் நடத்தும் அறிவிப்புகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எப்போது தேர்தல் நடத்தப்படும் எனும் புதிய தேதிகளும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் பிஹார் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு தேர்தல் நடத்துவதை ஒத்தி வைக்க வேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சி கோரியிருந்தது.

மேலும், காணொலி மூலம் மக்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்யும் முறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

மேலும், பாஜக டிஜிட்டல் பிரச்சாரம் செய்வது குறித்து பிஹாரில் உள்ள 9 கட்சிகள் சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். பாஜகவின் டிஜிட்டல் பிரச்சாரத்தை மட்டும் வைத்து டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அனுமதிக்க கூடாது, வழக்கமான முறையில் மக்களைச் சந்தித்தும், கூட்டம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

ஆதலால், தேர்தல் ஆணையம் வெளியிடும் தேர்தல் நடத்தும் வழிகாட்டி நெறிமுறைகளில் டிஜிட்டல் பிரச்சாரம், வழக்கமான தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றுக்கான விதிமுறைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in