உ.பி.யில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தின் போது சேதமடைந்த சொத்துக்களை மீட்க இரு நகரங்களில் தீர்ப்பாயம் அமைப்பு: முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் : கோப்புப்படம்
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் : கோப்புப்படம்
Updated on
2 min read


உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்ட(சிஏஏ) எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. அந்த சொத்துக்களுக்கான இழப்பீடுகளை திரும்ப்பெறுவதற்காக லக்னோ, மீரட் இரு நகரங்களில் தீர்ப்பாயத்தை அமைத்து முதல்வர் ஆதித்யநாத் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடந்தன. உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, மீரட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்தன.

இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி லக்னோவில் நடந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் வன்முறையில் முடிந்து கோடிக்கணக்கான மதிப்புள்ளன பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.

லக்னோவில் நடந்த சிஏஏ எதிர்ப்புப்போராட்டம்: கோப்புப்படம்
லக்னோவில் நடந்த சிஏஏ எதிர்ப்புப்போராட்டம்: கோப்புப்படம்

இந்த போராட்டத்தில் சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீட்டை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து திரும்பப் பெற உ.பி. அரசு உத்தரவிட்டது. இதற்காக பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியதற்கு இழப்பீடு பெறும் அவசரச்சட்டத்தை உ.பி. அரசு கொண்டு வந்தது.

இதையடுத்து லக்னோ நிர்வாகம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறப்படும் 50 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ரூ.1.55 கோடி சொத்துக்களை மீட்கப்போவதாக அறிவித்தது.

இந்த போராட்டம் தொடர்பாக லக்னோவில் உள்ள 4 காவல் நிலையங்களில் 54 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காத்ரா பகுதியில் ரூ.21.76 லட்சம் சேதப்படுத்தியதாக 21 பேர் மீதும், பரிவர்தன் சவுக் பகுதியில் ரூ.69.65 லட்சம் சேதப்படுத்தியதாக 24 பேர் மீதும், தாகூர்கஞ்ச் பகுதியில் ரூ.47.85 லட்சம் சேதப்படுத்தியதாக 10 பேர் மீதும் வழக்குப்பதிவுசெய்யப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டு பொது தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாகக் கூறப்படும் காங்கிரஸ் தலைவர் சதாப் ஜாபர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எஸ்ஆர் தாராபூரி, சமூக ஆர்வலர் முகமது சோயிப் உள்ளிட்ட ப லரின் புகைப்படங்களை பதாகைகள் மூலம் லக்னோ மாவட்ட நிர்வாகம் விளம்பரப்படுத்தியது. இதைத் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் பதாகைகள் வைக்க தடை விதித்தது.

அதன்பின் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களிடம் இருந்து சொத்துக்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை லக்னோ மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்தது.

லாக்டவுன் கட்டுப்பாடு தளர்வு மற்றும் கரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் ஹஸ்ரத்ஹான்ஞ் பகுதியில் மகனூர் சவுத்ரி, தரம்வீர் சிங் ஆகிய அசையா சொத்துக்களை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அபிஷேக் பிரகாஷ் முடக்கி வைத்து ஏலத்துக்கு அறிவித்தார்.

இந்நிலையில் பொது மற்றும் தனியார் சொத்துக்களை இழப்பீடு பெறுவதற்காக பாதிக்கப்பட்டவர்கள் அனுகுவதற்காக லக்னோ, மீரட் நகரில் இரு தீர்ப்பாயங்களை முதல்வர் ஆதித்யநாத் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, லக்னோ தீர்ப்பாயத்தில், ஜான்ஸி, கான்பூர், சித்ரகூட் தாம், லக்னோ, அயோத்தி, தேவி பதான் பிரயாக்ராஜ், ஆசம்கார்க், வாரணாசி, கோரக்பூர், பாஸ்தி, விந்தியாஞ்சல் தாம் ஆகிய நகரங்களைச் சேர்ந்த மக்கள் முறையிடலாம்.

மீரட் நகரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் மீரட், அலிகார், மொராதாப், பேரேலி, ஆக்ரா பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் முறையிட்டு தீர்வு, இழப்பீடு பெறலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in