

கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக ததகதா ராய்க்குபதிலாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி கோவா மாநிலத்தின் நிர்வாகப் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகலாயா ஆளுநராக இருந்த ததகதா ராய்க்கு 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதால் அவர் மாற்றப்பட்டுள்ளார் என்று அரசியல்வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் ததகதா ராய் மாற்றத்துக்கு எந்தவிதமான காரணமும், அவருக்கு 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படவில்லை.
மேகலாயா ஆளுநராக இருந்த ததகதா ராய், இதற்கு முன் திரிபுராவில் 3 ஆண்டுகள் ஆளுநராகவும், அதன்பின் மீதமுள்ள ஆண்டுகள் மேகலாயாவில் ஆளுநராகவும் இருந்தார், அடுத்த மாதத்தோடு அவருக்கு வயது 75 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதால் இந்த மாற்றம் நடந்திருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவைப் பொறுத்தவரை 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகப் பதவி வகிக்க கட்டுப்பாடு இருந்து வருகிறது. இதற்கு முன் பல அமைச்சர்கள் இதுபோல் 75 வயதானவுடன் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஒரு மாநில ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால், பொதுவாக 5 ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்படுகிறது. இதற்கு முன் சத்தீஸ்கர் ஆளுநராக இருந்த இஎஸ்எல் நரசிம்மன் 12 ஆண்டுகள் அந்த மாநிலத்திலேயே ஆளுநராக இருந்தார். அதன்பின் பிரிக்கப்படாத ஆந்திரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ததகதாராயைப் பொறுத்தவரை சமீபக காலமாக சில சர்ச்சைகளில் சிக்கி வந்தார். குறிப்பாக கடந்த ஆண்டு காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த தாக்குதலைதயடுத்து, மேகாலயாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் காஷ்மீரிலிருந்து வரும் பொருட்களை மேகாலயாவில் தடை செய்ய வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த கருத்தை ஆதரித்து ததகதா ராய் ட்விட் செய்திருந்தார். இந்த செயல் அரசியல்வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சத்ய பால் மாலிக்கை வரவேற்று ஆளுநர் ததகதா ராய் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் “ குடியரசுத் தலைவர் மாளிகை செய்தியை அறிந்து சத்யபால் மாலிக்கை தொடர்பு கொண்டு பேசினேன். புதிய ஆளுநரை ஷில்லாங்கில் வரவேற்க காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
சத்யபால் மாலிக் இதற்கு முன் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலம், இருயூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில், கோவா ஆளுநராக சத்யபால் மாலிக் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.