

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 லட்சத்தைக் கடந்துள்ளது, அதேசமயம், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் புதிதாக 55 ஆயிரத்து 79 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கரோனாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 லட்சத்து 2 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 7-ம் தேதி 20 லட்சமாக கரோனா பாதிப்பு இருந்த நிலையில் அடுத்த 11 நாட்களில் 7 லட்சம் அதிகரித்துள்ளது.
ஆறுதலும், நம்பிக்கையும் அளிக்கும் வகையில் கரோனாவிலிருத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20லட்சத்தை நெருங்கியுள்ளது, இதுவரை 19 லட்சத்து 77 ஆயிரத்து 779 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 73.18 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 166 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் 24.91 சதவீதம் ேபர் மட்டுமே கரோனாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 876 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 51 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை 3 கோடியே 9 லட்சத்து 41 ஆயிரத்து 264 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை மட்டும் 8லட்சத்து 99 ஆயிரத்து 864 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 228 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 20ஆயிரத்து 265 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 55ஆயிரத்து 579 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 120 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,886 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 54 ஆயிரத்து 122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 10 ஆயிரத்து 852 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,214ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14 ஆயிரத்து 315 பேர் சிகிச்சையில் உள்ளனர். 15 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,800ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 80,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 115 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 4,062 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 15,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது