

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக துணைமுதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் அவரது பதவி பறிக்கப்பட்டது. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கங்கிரஸ் மேலிடம் தலையிட்டு சமரசம் செய்து வைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் பேரவையில் அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானத்தில் பைலட் உட்பட அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், அரசு வெற்றி பெற்றது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்புகளை கவனிக்கும் புதிய பொதுச் செயலாளராக மூத்த தலைவர் அஜய் மக்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அந்தப் பொறுப்பில் இருந்த அவினாஷ் பாண்டே விடுவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. அவினாஷ் பாண்டேயின் செயல்பாடுகள் பற்றியும் அவரை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கட்சி மேலிடத்திடம் சச்சின் பைலட் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.