

கேரள மாநிலம் கொச்சியின் புறநகரில் அமைந்துள்ளது முலன்துருத்தி. இங்கு ஜேகோபைட் தேவாலயம் (சர்ச்) இயங்கி வந்தது. இதுபோன்ற சர்ச்சுகள் கேரளாவில் ஏராளமாக உள்ளன.
இந்நிலையில், ஜேகோபைட் சர்ச்சுகளை நிர்வகிப்பது தொடர்பாக பல ஆண்டுகளாக ஆர்த்தோடக்ஸ் கத்தோலிக்க சர்ச் பிரிவினருக்கு சர்ச்சை நிலவி வருகிறது. இதுதொடர்பான வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘‘கேரளாவில் உள்ள 1,100 ஜேகோபைட் சர்ச்சுகளை கையகப்படுத்தி, ஆர்த்தோடக்ஸ் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று கேரள மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், கேரள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை எதிர்த்து ஆர்த்தோடக்ஸ் சர்ச் பிரிவினர், கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ஜேகோபைட் சர்ச்சுகளை கையகப்படுத்தி உடனடியாக ஆர்த்தோடக்ஸ் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று உத்தர விட்டது.
இதையடுத்து, போலீஸார் நேற்று காலை முலன்துருத்தியில் உள்ள ஜேகோபைட் சர்ச்சுக்கு சென்றனர். தகவல் அறிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே, ஜேகோபைட் சர்ச்சுக்குள் ஏராளாமானோர் சென்று உள்பக்கம் தாழ்பாள் போட்டு மூடிக் கொண்டனர். ஏராளமானோர் வெளியில் போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் நடவடிக்கை எடுத்ததில், பாதிரியார்கள் உட்பட பலர் காயம் அடைந்தனர்.
மேலும், சர்ச் கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே புகுந்தனர். அங்கிருந்தவர்களை வெளியில் விரட்டினர். அதன்பிறகு சர்ச் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.