

பிஹார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நரேந்திர மோடியைக் குறிவைத்து நடத்தப்பட்டது என தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி பிஹார் மாநிலம் பாட்னாவில் நரேந்திர மோடி பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டம் மற்றும் ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், 7 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்டதாக, தடை செய்யப்பட்ட இயக்கங்களான சிமி மற்றும் இந்தியன் முஜாகிதீன் அமைப்புகளுடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் நரேந்திர மோடியைக் குறிவைத்து நடத்தப்பட்டது என தேசியபுலனாய்வு அமைப்பின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
பாட்னா தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நிச்சயமாக மோடியைக் குறிவைத்தே நிகழ்த்தப்பட்டுள்ளது. தாக்குதலில் தொடர்படைய ‘பிளாக் பேட்டரி’ எனப்படும் ஹைதர் அலி, முஜிபுல்லா, நுமான் அன்சாரி மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட ஒருவர் ஆகிய நால்வரை என்ஐஏ கைது செய்துள்ளது. இவர்கள், புத்த கயை, பாட்னா தொடர் குண்டுவெடிப்பு, ஹைதரபாத் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என சரத்குமார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஹைதர் அலியைத் தவிர மற்றவர்களைப் பிடித்துக் கொடுத்தாலோ அல்லது துப்புக் கொடுத்தாலோ ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.