

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சமரேஷ் தாஸ் சிகிச்சைபலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 76.
கரோனா வைரஸுக்கு உயிரிழக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2-வது எம்எல்ஏ சமரேஷ் தாஸ் ஆவார். இதற்கு முன், கட்சியின் பொருளாளர் தமோனாஷ் கோஷ் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஈக்ரா தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சமரேஷ் கோஷ். இந்த தொகுதியில் தொடர்ந்து 3 முறை எம்எல்ஏவாக சமரேஷ் கோஷ் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சமரேஷ் கோஷுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமரேஷ் கோஷ் சிகிச்சை பெற்று வந்தார்.
சமரேஷ் கோஷ் ஏற்கெனவே சிறுநீரகம், இதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக தனியாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் கரோனா பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக மருத்துவர்களின் தீவிரமான கண்காணிப்பில் சமரேஷ் கோஷ் இருந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் இன்று காலை உயிரிழந்தார் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமரேஷ் கோஷ் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார், சமரேஷ் கோஷ் மறைவு மாநில அரசியலில் மிகப்பெரியவெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என மம்தா தெரிவித்துள்ளார்.
ேமற்கு வங்கத்தில் மூன்றாவது மிகப்பெரியஅரசியல் தலைவராக சமரேஷ் கோஷ் இருந்து வந்தார். இதற்கு முன் மூத்த தலைவர் தமோனாஷ் கோஷ் கடந்த ஜூன் மாதம் கரோனாவில் உயிரிழந்தநிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்து இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே பிதாநகர் மாநகராட்சி கவுன்சிலரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சுபாஷ் போஸ், பனிஹாதி நகராட்சி வாரிய நிர்வாகி ஸ்வபன் கோஷ் ஆகியோரும் இந்த மாதத்தில் கரோனாவில் உயிரிழந்தனர்.
இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.பி. ஷியாமள் சக்ரவர்த்தியும் கரோனா வைரஸ் தொற்றால் இம்மாதத் தொடக்கத்தில் உயிரிழந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.