

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிட முடியாது, அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நடத்திதான் தீர வேண்டும், தேர்வை பாதுகாப்புடன் நடத்த மத்திய அரசு அளிக்கும் உத்தரவாதத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் நடைபெறுவதாக உள்ள நீட் மற்றும் ஜேஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், கரோனா தொற்று கட்டுக்குள் வந்து சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தேர்வை நடத்த வேண்டும் என 11 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மேலும் ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்காக மாவட்டத்து 1 மையம் என கூடுதல் மையங்கள் ஏற்படுத்த வேண்டும், ஜூலை 3-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ நடப்பு கல்வி ஆண்டுக்கான ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகளை நடத்தும்போது போதுமான பாதுகாப்புடன், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என உறுதி அளித்தார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,“ வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நகர்ந்துதான் ஆக வேண்டும், ஓராண்டை இழப்பதற்கு மாணவர்கள் தயாராக உள்ளனரா?
தற்போதைய சூழல் குறித்து தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா ? நீதிமன்றத்தில் நேரடி விசாரணை வேண்டும், நீதிமன்றத்தை திறக்கவேண்டும் என்றும் நீங்கள் கோரவில்லையா? அப்படி இருக்கும்போது தேர்வு ஏன் நடைபெறக்கூடாது?
தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடும். எனவே மத்திய அரசு தேர்வுகளை பாதுகாப்பாகவும், தற்காப்பு நடவடிக்கைகளுடன் நடத்துவோம் என்று உறுதி அளிப்பதை பதிவு செய்கிறோம்”.
எனத் தெரிவித்து தேர்வுக்கு தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்