

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 26 லட்சத்தைக் கடந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 50 ஆயிரத்தைக் மேல் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவினால் புதிதாக 57 ஆயிரத்து 981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 26 லட்சத்து 47 ஆயிரத்து 663 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்து, 19 லட்சத்து 19 ஆயிரத்து 842 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமைடந்தோர் சதவீதம் 72.51 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 76 ஆயிரத்து 900 பேராக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 941 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு 50 ஆயிரத்துக்கும்மேல் சென்று 50ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.92 ஆகச் சரிந்துள்ளது.
கரோனா பரிசோதனை எண்ணிக்கை நாட்டில் 3 கோடியைக் கடந்துள்ளது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை 3 கோடியே 41 ஆயிரத்து 400 மாதிரிகள் ப ரிசோதிக்கப்பட்டன, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7 லட்சத்து 31 ஆயிரத்து 697 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 288 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 20ஆயிரத்து 37 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 58ஆயிரத்து 705 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 125 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,766 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 54 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 10 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,196 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14 ஆயிரத்து 383 பேர் சிகிச்சையில் உள்ளனர். 20 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,785 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 81,528 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 116 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3,947 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 15,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது