

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில், சிஆர்பிஎப் வீரர்கள் இருவர், காஷ்மீர் போலீஸார் ஒருவர் என 3 பேர் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உயிரிழந்தனர்.
பாரமுல்லா மாவட்டம், கிரிரீ பகுதியில் உள்ள நகா எனும் இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனைச் சாவடி அமைத்து பாதுகாப்புப் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தனர்.
இன்று அதிகாலை அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படை தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் படை வீரர்கள் இருவரும், போலீஸார் ஒருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜயகுமார் கூறுகையில் “பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 3 வீரர்களை நாம் இழந்துவிட்டோம். அங்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளன” எனத் தெரிவி்த்தார்.
இந்த தாக்குதல் குறித்து காஷ்மீர் மண்டல போலீஸ் பிரிவு ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “பாரமுல்லா மாவட்டம் கீரிரீ பகுதியில் சிஆர்பிஎப், போலீஸார் இணைந்து பாதுகாப்புப்பணியில் இன்று ஈடுபட்டிருந்தபோது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் சிஆர்பிஎப் வீரர்கள் இருவர், போலீஸார் ஒருவர் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். தப்பி ஓடிய தீவிரவாதிகளைப் பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடக்கும் 3-வது தாக்குதல் இதுவாகும். கடந்த 14-ம் தேதி ஸ்ரீநகரின் நவுகாம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீஸார் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.