

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கவில்லை.
எனினும் சுதந்திர தினத்தையொட்டி சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறது. நாட்டில் எழுத, பேச, கேள்விகள் எழுப்ப சுதந்திரம் இருக்கிறதா? பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 'வால் ஸ்டீரிட் ஜர்னல்' நாளிதழில், 'இந்தியாவில் பேஸ்புக் எதிர்கொள்ளும் பிரச்சினை' என்ற தலைப்பிலான செய்தியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் அவர் கூறும்போது, "இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. பொய் செய்திகளையும் வெறுப்புணர்வையும் பரப்பி வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் பேஸ்புக்கின் உண்மை நிலை குறித்த செய்தியை அமெரிக்க ஊடகம் வெளியிட்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் மற்றொரு பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியை தவிர எல்லோரும் இந்திய ராணுவத்தின் திறன், வீரத்தை நம்புகின்றனர். சீனா நம்முடைய நிலத்தை எடுக்க அனுமதித்தது யாருடைய கோழைத்தனம்? யாருடைய பொய்களால் அவர்களே (சீனா) நமது நிலத்தை வைத்திருப்பது உறுதி செய்யப்படுகிறது” என்று விமர்சித்துள்ளார்.