Published : 17 Aug 2020 08:09 AM
Last Updated : 17 Aug 2020 08:09 AM

மொரீஷியஸ் அருகே கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற 30 டன் கருவிகளை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி

மொரீஷியஸ் அருகே கடலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதையடுத்து 30 டன் எடையுள்ள தொழில்நுட்பக் கருவிகளை இந்தியா அனுப்பியுள்ளது.

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் சரக்கு கப்பல் 3,800 டன் பெட்ரோலுடன் கடந்த மாதம் 25-ம் தேதி இந்தியப் பெருங்கடல் தீவு நாடான மொரீஷியஸ் அருகே கடலில் பயணித்துக் கொண்டிருந்தது.

அப்போது சர்வதேச அளவிலான பாதுகாப்பு தளமாக அறியப்படும் பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் கப்பல் மோதி சேதமடைந்தது.

இந்த விபத்து காரணமாக கப்பல் நகர முடியாமல் அதே இடத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. சேதமடைந்த கப்பலில் இருந்த குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே நேரம் பாறையில் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்து பெட்ரோல் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் மொரீஷியஸ் அரசு இறங்கியது. மேலும் நாட்டில் சுற்றுச்சூழல் அவசர நிலையை அரசு பிரகடனப்படுத்தியது.

1,000 டன் கசிவு

இதனிடையே கப்பலில் இருந்து பெட்ரோல் கசிவதைத் தடுக்கும் அரசின் முயற்சிக்கு பெரிதாக பலன் கிடைக்கவில்லை. பெட்ரோல் கசிவு மோசமடைந்து வருகிறது. அதன்படி தற்போது வரை 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வரும் நாட்களில் கப்பல் முழுவதுமாக உடைந்து ஒட்டுமொத்த பெட்ரோலும் கடலில் கலக்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடலில் கசிந்துள்ள பெட்ரோலை அகற்றுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் தங்களிடம் இல்லாததால் பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அவசர உதவி கோரி மொரீஷியஸ் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் மொரீஷியஸின் வேண்டுகோளை ஏற்று 30 டன் எடையுள்ள தொழில்நுட்பக் கருவிகளை இந்தியா அனுப்பியுள்ளது. இந்தத் தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய விமானப் படை (ஐஏஎப்) விமானம் மூலம் இந்தப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள 10 பேர் கொண்ட தொழில்நுட்ப மீட்புக் குழுவினரும் சென்றுள்ளனர். கடலில் கலந்துள்ள எண்ணெயை எடுக்கும் பணியில் இந்தக் குழு அனுபவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x