

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டுமெனில் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) அல்லது பற்று அட்டை (டெபிட் கார்டு) உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பயன்படுத்த வேண்டும். வரும் புத்தாண்டில் இருந்து பண பரிவர்த்தனை மூலம் பயணம் மேற்கொள்ள முடியாது. இதை செயல்படுத்த டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரை மேம்படுத்த டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) முடிவு செய்துள்ளது. தானியங்கி முறையில் பயண கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அங்கு செயல்படுத்த உள்ளது. இப்புதிய நடைமுறை மெட்ரோ நான்காவது கட்ட விரிவாக்க பாதைகளிலும் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கிலும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தானியங்கி கட்டணம் வசூலிக்கும் முறையை (ஏஎப்சி) அமல்படுத்துவதற்கான சாஃப்ட்வேரை மேம்படுத்துவதோடு பயணிகள் கட்டாயம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வகையில் இது செயல்படுத்தப்படும். சில வங்கிகளின் அட்டைகளை ஸ்மார்ட் அட்டைகளாக மெட்ரோ ரயில் நிலையங்களில் பயன்படுத்த முடியும். இத்தகைய நடைமுறை கொச்சி மற்றும் நாகபுரி மெட்ரோ நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் இதற்கு சில குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.
டிஎம்ஆர்சி செயல்படுத்தப்பட உள்ள சாஃப்ட்வேரில் அனைத்து வங்கிகளின் கடன் அட்டை மற்றும் பற்று அட்டைகள் ஏற்கும் வகையில் ரூபே கார்டு மூலம் ஏற்கத்தக்கதாக வடிவமைக்கப்படும். முதல் கட்டமாக விமான நிலைய மார்க்கத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இது செயல்படுத்தப்படும். பின்னர் இது பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
இப்புதிய நடைமுறையில் அபராத பிடித்தம் செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ள நடைமுறையில் பயணி ஒருவர் கூடுதலாக பயணிக்க நேர்ந்தால் அதற்கேற்ற கட்டணத்தை அவர் வெளியேறும் ரயில் நிலையத்தில் செலுத்த வேண்டும்.