Last Updated : 17 Aug, 2020 06:50 AM

 

Published : 17 Aug 2020 06:50 AM
Last Updated : 17 Aug 2020 06:50 AM

பெங்களூரு கலவர வழக்கில் 340 பேர் கைது: 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு

பெங்களூருவில் நடந்த கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர் உட்பட 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

மத வெறுப்பை தூண்டும் வகையிலான முகநூல் பதிவு காரணமாக பெங்களூருவில் கடந்த 11-ம் தேதி இரவு பெரும் கலவரம் நடந்தது. கலவரத்தை ஒடுக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். வன்முறையில் 60 போலீஸார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல் பந்த் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸார் கலவரம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கடந்த ஓராண்டில் மங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களையும் அதன் வீடியோ ஆதாரங்களையும் பெங்களூரு கலவர வீடியோவையும் ஒப்பிட்டு ஆராய்ந்து வருகின்றனர்.

காவல் நிலையத்தை தாக்கியது, எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீட்டை தாக்கியது உள்ளிட்ட வழக்குகளில் இதுவரை 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ், எஸ்டிபிஐ, பிடிஎஃப் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 22 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நாகவாரா வார்டு காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் இர்ஷத் பேகமின் கணவர் கலீம் பாஷாவும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த முஷாமில் பாஷாவும் அடங்குவர்.

சம்பவம் நடந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் காடுகொண்டனஹள்ளி, தேவர் ஜீவனஹள்ளி, காவல் பைசந்திரா ஆகிய 3 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 18-ம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கைதானவர்களில் ஒருவரான நதீம் என்பவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுவரை 120 பேரிடம் விசாரணை முடிந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மஜதவில் இருந்து விலகிய அகண்ட சீனிவாச மூர்த்தி, கடந்த 2018-ல் காங்கிரஸில் இணைந்தார். சட்டப்பேரவைத் தேர்லில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியில் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை மீறி மேலிடம் வாய்ப்பு வழங்கியதால் உள்ளூர் காங்கிரஸார் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இப்பகுதியில் தங்கள் கட்சியை வளர்க்க இளைஞர்களை தூண்டிவிடும் வேலையில் எஸ்டிபிஐ ஈடுபட்டுள்ளது. குறிப்பாக அகண்ட சீனிவாச மூர்த்திக்கு பதிலாக, முஸ்லிம் எம்எல்ஏவை கொண்டுவர வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் ஆட்களை திரட்டி, வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x