

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜி கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு மூளையில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. மேலும், அவருக்கு கரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது' என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டர் பதிவில், ‘உங்களின் பிரார்த்தனைகளால் எனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.