Published : 16 Aug 2020 10:10 PM
Last Updated : 16 Aug 2020 10:10 PM

சச்சின் பைலட் எழுப்பிய விவகாரம்; 3 பேர் கமிட்டியை நியமித்தது காங்கிரஸ்

புதுடெல்லி

ராஜஸ்தானில் சச்சின் பைலட் எழுப்பிய விவகாரம் குறித்து ஆராய்வதற்காக 3 பேர் கமிட்டியை காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்துள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.

காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்தார். ஆளுநர் மிஸ்ரா ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட உத்தரவிட்டார்.
இந்தச் சூழலில் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் தனியே சந்தித்துப் பேசினார்.

ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பு சுமுகமான மாற்றத்தை உருவாக்கியது.

ராஜஸ்தான் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை நியமிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்துள்ளார். இதனால் சச்சின் பைலட் கட்சிக்கு மீண்டும் திரும்பினார்.

இருவரின் ஒற்றுமைக்கு பின்னர் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெலாட் அரசு வெற்றி பெற்றது.

இந்தநிலையில் சோனியா காந்தி அறிவித்தபடி 3 பேர் கமிட்டியை காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்தது.

ராஜஸ்தான் காங்கிரஸில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் சச்சின் பைலட் எழுப்பிய விவகாரம் குறித்து ஆராய்வதற்காக 3 பேர் கமிட்டி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அகமது படேல், கே.சி. வேணுகோபால், அஜய் மக்கான் ஆகிய 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து மேலிடத்திற்கு அறிக்கை அளிப்பார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x