

ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைகேட்பு வலைதளம் உருவாக்க மத்திய அரசு உதவும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 20 மாவட்டங்களிலும் குறைகேட்பு வலைதளம் உருவாக்க மத்திய அரசு உதவும் என்று வடகிழக்குப் பிராந்திய மேம்பாடு (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில், சிறந்த நிர்வாக முன்முயற்சிகளை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் ஆகியோர் தொலைபேசி மூலம் உரையாடினர். யூனியன் பிரதேசத்தில் குறைதீர்வு வலைதளம் உருவாக்குவது பற்றி அவர்கள் பேச்சு நடத்தினர்.
இந்த விவாதத்தை தொடர்ந்து, டாக்டர் ஜித்தேந்திர சிங் உடனடியாக நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை ஏஆர்பிஜி செயலர் டாக்டர் சத்ரபதி சிவாஜி , கூடுதல் செயலர் வி.சீனிவாஸ் உள்ளிட்ட பொதுமக்கள் குறைதீர்வு தொடர்பான மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர்களிலும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களது வீடு தேடித் தீர்வுகளை அளிக்கும் வலைதளம் ஒன்றை உருவாக்குவது பற்றிய திட்டம் முடிவு செய்யப்பட்டது.
இந்த முன்முயற்சியை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை , யூனியன் பிரதேச அரசுடன் ஒருங்கிணைந்து அந்த அரசின் ‘’ ஆவாஸ் இ-அவாம் ‘’ தளத்தை சீரமைத்து மேம்பட்ட தரத்துடன் உரிய நேரத்திற்கு முன்னதாகவே தீர்வு காணும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும். இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை அதிகாரிகள் குழு அமைக்கப்படும். இக்குழு, வரும் நாட்களில், யூனியன் பிரதேச அரசுடன் தொடர்பு கொண்டு செயல்படும் என டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.