

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 லட்சத்தை நெருங்குகிறது, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்ட உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 63 ஆயிரத்து 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 25 லட்சத்து 89 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 7-ம் தேதியிலிருந்து நாள்தோறும் தொடர்ந்து 60 ஆயிரத்துக்கு மேல் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆறுதல் தரும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 62 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 77 ஆயிரத்து 44 பேர் ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 944 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 49 ஆயிரத்து 980 ஆக அதிகரித்து, 50 ஆயிரத்தை எட்ட உள்ளது. ஆனால் உயிரிழப்பு வீதம் என்பது 1.93 சதவீதமாகச் சரிந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 322 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 127 பேர், கர்நாடகாவில் 114 பேர், ஆந்திராவில் 87 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசத்தில் தலா 58 பேர், பஞ்சாப்பில் 40 பேர், குஜராத்தில் 19 பேர், ராஜஸ்தானில் 16 பேர், மத்தியப்பிரதேசத்தில் 13 பேர், டெல்லி, ஹரியாணாவில் தலா 10 பேர் உயிரிழந்தனர்.
ஒடிசா, தெலங்கானாவில் தலா 9பேர், பிஹாரில் 8 பேர், அசாம், ஜம்மு காஷ்மீர், கேரளாவில் தலா 7 பேர், கோவா, திரிபுராவில் தலா 5 பேர், சத்தீஸ்கர், ஜார்கண்ட், உத்தரக்கண்டில் தலா 4பேர், லடாக்கில் ஒருவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 322 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 19 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 56ஆயிரத்து 719 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 127 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,641 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 54 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 11 ஆயிரத்து 489 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,188 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14 ஆயிரத்து 241 பேர் சிகிச்சையில் உள்ளனர். 19 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,765 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 81,824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 114 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3,831 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 14,944 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.