Published : 16 Aug 2020 08:20 AM
Last Updated : 16 Aug 2020 08:20 AM

தெலங்கானா மாநிலத்தில் ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் உட்பட 4 பேர் கைது: 2-வது நாளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை

தெலங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டம், கினரா மண்டல தாசில்தாராக பணியாற்றி வருபவர் நாகராஜு (54). இதே மண்டலத்தில் ராம்பல்லி எனும் இடத்தில் 54 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. இதில் 28 ஏக்கர் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த தனியார் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் கையகப்படுத்த திட்டமிட்டனர்.

இது தொடர்பாக கினரா தாசில்தார் நாகராஜுவிடம் பேரம் பேசப்பட்டது. இந்த 28 ஏக்கர் நிலத்தில் ஓய்வுபெற்ற கண்காணிப்பு அதிகாரிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலமும் உள்ளது. இதனை ஒரே பெயரில் மாற்றி அமைக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுப்பதாக ரியல் எஸ்டேட் வியாபாரிகள் தாசில்தார் நாகராஜுவிடம் பேரம் பேசி முடித்தனர். இதில் ரூ.1.10 கோடி முன்பணமாக நேற்று முன்தினம் தாசில்தார் நாகராஜுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாசில்தாரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.500 மற்றும் ரூ.100 என கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தாசில்தார் நாகராஜு, ராம்பல்லி கிராம வருவாய் அதிகாரி சாய்ராஜ், ரியல் எஸ்டேட் தரகர் நாத், நிலத் தரகர் கன்னட அஞ்சி ரெட்டி ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ரூ.1.10 கோடி ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

தாசில்தார் உள்ளிட்ட கைதான அனைவரிடமும் இரண்டாம் நாளாக நேற்றும் விசாரணை தொடர்ந்தது. ஏற்கெனவே நாகராஜு வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைதாகியிருந்தார். இந்த வழக்கில் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x