

ஊழல் தொடர்பான பெரும்பாலான புகார்களை அரசுத் துறைகள் உரிய நேரத்தில் ஆராயவில்லை என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் பற்றி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) ஆராய்ந்து அதுபற்றி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இந்நிலையில், அரசுத் துறைகளில் உள்ள ஊழல் கண்காணிப்பு முதன்மை அதிகாரிகளுக்கு (சிவிஓ) சிவிசி அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
சிவிசியின் புகார்களை கையாளும் கொள்கையின்படி, ஆணையத்துக்கு வரும் புகார்கள் உரிய நடவடிக்கைக்காக சிவிஓ-க்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் புகார்கள் தொடர்பாக அறிக்கையோ பதிலோ தர வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அதுகுறித்து ஒரு மாதத்தில் ஆராய்ந்து அதன் மீது முடிவு எடுக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான புகார்கள் உரிய நேரத்தில் ஆராயப்படவில்லை என்பது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, புகார்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டால் 12 வாரத்தில் விசாரணையை முடித்து அறிக்கை தர வேண்டும். மற்ற புகார்களை உரிய நடவடிக்கைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட துறைகளே முடித்து வைக்கலாம். எனினும், புகார்களின் நிலை பற்றி ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.