Published : 15 Aug 2020 01:05 PM
Last Updated : 15 Aug 2020 01:05 PM

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து அதேநிலையில் இருப்பதாகவும், முன்னேற்றமும் இல்லை எனவும் டெல்லி ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அர்ஜுன் ராம் மேக்வால், தர்மேந்திர பிரதான், விஸ்வாஸ் சாரங், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பி.ஸ்ரீராமுலு, கர்நாடக வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த பிரணாப் முகர்ஜியும் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தற்போது வயது 84. முதுமை காரணமாக உடல் பலவீனமான நிலையில் இருந்து வருகிறார்.

டெல்லியிலுள்ள, தனது வீட்டுக் கழிவறையில் அவர் வழுக்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது தலையில் அடிபட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்திருந்த ரத்தத்தை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு ஐசியூ பிரிவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

கரானா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் செயற்கை சுவாசத்தின் தேவை இருந்திருக்காது என தெரிகிறது.

அவருக்கு ஏற்பட்ட ரத்தக் கசிவுக்கான அறுவை சிகிச்சை முடிந்தது இருப்பினும் கரோனா தொற்று காரணமாக பிரணாப்பின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுகிறது, அவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் மாற்றம் எதுவும் இல்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x