Last Updated : 15 Aug, 2020 12:49 PM

 

Published : 15 Aug 2020 12:49 PM
Last Updated : 15 Aug 2020 12:49 PM

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது: சீனா,பாகிஸ்தானுக்கு செய்தி விடுத்த பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்தின உரையாற்றிய காட்சி :ப டம் ஏஎன்ஐ

புதுடெல்லி

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கும், எல்லை முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடுவரை அத்துமீறுபவர்களுக்கும் நமது ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்கள் என்று பிரதமர் மோடி, சீனா, பாகிஸ்தானுக்கு செய்தி தெரிவித்தார்.

நாட்டின் 74-வது சுதந்திரதினமான இன்று காலை டெல்லி ராஜ் காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர்கள் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி வணக்கம் செலுத்தினார்.

அப்போது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திரதின உரையில் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டுப் பேசினார். இதில் குறிப்பாக எல்லையில் அன்னிய நாட்டு படைகள்(சீனா, பாகிஸ்தான் பெயர்குறிப்பிடாமல்) அத்துமீறலையும், எல்லையை ஆக்கிமிரப்பதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

அவர் பேசியதாவது:

இந்தியா தீவிரவாதத்துக்கு எதிராகவும், எல்லையில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராகவும் தீர்மானத்துடன் போரிட்டு வருகிறது. இந்தியாவின் இறையாண்மைதான் அனைத்தையும்விட உயர்ந்தது.

கிழக்கு லடாக்கில் இந்திய வீரர்களின் வீரத்தையும், துணிச்சலையும், அங்கு அமைதியை கொண்டுவர வீரர்கள் செய்த செயலையும் இந்த உலகம் கவனித்தது. அந்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு நான் இந்த செங்கோட்டையில் நின்று நன்றி செலுத்துகிறேன்.

எல்லை முதல் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி வரை இந்தியாவின் இறையாண்மையை மீறுபவர்களுக்கு நம்முடைய துணி்ச்சல் மிக்க வீரர்கள் அவர்களின் கையாளும் முறையிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்கள். தேசத்தின் இறையான்மையைப் பாதுகாக்க ஒட்டுமொத்த மக்களும் சேர்ந்து போராடுவார்கள்.

உலகம் இன்று இந்தியாவின் பக்கம் இருக்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவைத் தேர்வு செய்ய நடந்த தேர்தலில் 196 உறுப்பு நாடுகளில் 184 நாடுகள் ஆதரவுஅளித்தன. இதுதான் அடையாளம்.
அண்டை நாட்டினர் என்பது வெறும் எல்லைகளை மட்டும் நம்முடன் பகிர்ந்தவர்கள் அல்ல.

நம்முடன் அன்பான இதயங்களையும் பகிர்ந்தவர்கள்தான் அண்டைநாட்டினர். அதுமாதிரியான நட்புறவுகள் மதிக்கப்படும்,வரவேற்கப்படும். இன்று, இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளுடன் நெருக்கமான உறவை வைத்துள்ளது. அண்டை நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றுகிறோம், பரஸ்பர மரியாதையுடன் செயல்படுகிறோம்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x