Published : 15 Aug 2020 09:41 am

Updated : 15 Aug 2020 09:41 am

 

Published : 15 Aug 2020 09:41 AM
Last Updated : 15 Aug 2020 09:41 AM

‘தற்சார்பு இந்தியா’ என்பது 130 கோடி இந்தியர்களின் மந்திரச்சொல்லாக மாறியுள்ளது; உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம்: பிரதமர் மோடி சுதந்திரதின உரை

atmanirbhar-bharat-has-become-mantra-for-everyone-pm-modi
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திரதின உரையாற்றிய காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

தற்சார்பு இந்தியா எனும் வார்த்தை 130 கோடி இந்தியர்களின் தாரகமந்திரமாக மாறி, தோற்றத்தை உருவாக்கியுள்ளது. உலகளவில் பங்களிப்பை உயர்த்தி, வழிநடத்தும் இடத்துக்கு இந்தியா வர வேண்டும் என்று 74-வது சுதந்திரதின விழாவில் பிரதமர் மோடி சூளுரைத்தார்.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தபோதிலும், 74-வது சுதந்திரதினம் இன்று நாடுமுழுவதும் சமூக விலகலைக் கடைபிடித்து, சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.


டெல்லியில் பிரதமர் மோடி, இன்று காலை ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் டெல்லி செங்கோட்டைக்கு, சுதந்திரதின நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு பிரதமர் மோடி வந்தார். அவரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அதன்பின் அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது, அதை மோடி ஏற்றுக்கொண்டார்.

அதன்பின் 74-வது சுதந்திரத்தினத்தில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து 7-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திரதின உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கும் போது சுதந்திரப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்த வீரர்கள், போர் வீரர்கள் ஆகியோருக்கும் , குறிப்பாக அரவிந்த கோஷை குறிப்பிட்டு பிரதமர் மோடி புகழாஞ்சலி செலுத்தினார்.

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் முன்களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோரின் பணிகளைக் குறிப்பிட்டார்.

அதன்பின் அவர் பேசியதாவது:

தற்சார்பு இந்தியா எனும் வார்த்தை இந்தியர்கள் ஒவ்வொருவரின் மனதிலும், 130 கோடி இந்தியர்களின் மனதிலும் மந்திரச்சொல்லாகி மாறி இருக்கிறது. இந்த தற்சார்பு இந்தியாவை மக்கள் உருவகப்படுத்திப் பார்க்கிறார்கள். அதை நாம் நனவாக்க வேண்டும்.

இந்த கரோனா வைரஸ் பரவல் காலத்தில், 130 கோடி இந்தியர்கள் மனதில் தற்சார்பு இந்தியா என்ற எண்ணம் உதயமாகிவிட்டது. தற்சார்பு இந்தியா எனும் கனவை நாம் நனவாக்குவோம் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கான திறமை,தன்னம்பிக்கை, செயல்திறன் அனைத்தும் இந்தியர்களுக்கு இருக்கிறது. நாம் ஒன்றை செய்ய முடிவெடுத்துவிட்டால், அந்த இலக்கை அடையும்வரை ஓய மாட்டோம்.

அடுத்த ஆண்டு 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்போகிறோம். ஒட்டுமொத்த தேசமும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம், குரல்கொடுப்போம் என்று சபதம் ஏற்க வேண்டும்.

உலகம் இந்தியாவை உற்று நோக்குகிறது. உலகை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல இந்தியா வளர வேண்டும். உலகிலேயே அதிகமான இளம் தலைமுறையினரைக் கொண்ட நாடு இந்தியாதான். உலகிலேயே புத்தாக்க சிந்தனையுடனும், புதிதாகச் சிந்திப்பவர்களாக இந்தியர்கள் உள்ளனர். உலகளவில் இந்தியாவின் பங்களிப்பை நாம் உயர்த்த வேண்டும். உலகை வழிநடத்தக்கூடிய இடத்துக்கு வர வேண்டும்.

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து, முழுமையாக நிறைவு செய்த பொருட்களை நாம் இறக்குமதி செய்து கொண்டிருப்பது. இந்த சுழற்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்து, நாம் நுகர்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் நாமே தயாரிக்க வேண்டும், ஏற்றுமதி செய்ய வேண்டும். தற்சார்பு இந்தியாவை உருவாக்க அனைத்து இந்தியர்களும் தயாராக வேண்டும்.

இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம் எனும் மந்திரத்துக்காக தேசம் உழைக்க வேண்டும். உலகளாவிய வர்த்தகம் நமக்காக காத்திருக்கிறது.

நம்முடைய அந்நிய நேரடி முதலீடு அனைத்து சாதனைகளையும் தகர்த்துள்ளது. அந்நிய நேரடி முதலீட்டில் 18 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளோம்.கரோனாவைரஸ் பரவல் காலத்தில்கூட இந்தியாவில் முதலீடு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் திறனை, திறமையை உலகம் உற்று நோக்குகிறது என்பதை சொல்கிறேன், இந்தியா மேலும் வளர்ச்சி அடையும் எனும் நம்பிக்கை இருக்கிறது.

வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்காக நாம் ஊக்கம் அளித்து, அவர்களின் பொருட்களை ஆதரித்து, தற்சார்பு உடையவர்களாக மாற்ற வேண்டும். தற்சார்பு இந்தியாவில் முக்கியமானது விவசாயிகளையும், வேளாண்மையையும் தற்சார்பு உடையதாக மாற்றுவதாகும். உள்ளூர் தயாரிப்புகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


தவறவிடாதீர்!

PM ModiAtmanirbhar BharatMantra for everyone:Prime Minister Narendra ModiSeventh straight Independence Day speechIndia’s share in global economy.Self-reliant Indiaதற்சார்பு இந்தியா74-வது சுதந்திரதினம்பிரதமர் மோடி130 கோடிமக்களின் தாரகமந்திரம் தற்சார்பு இந்தியா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author