

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த விபத்தில் சுமார் 80 பேர் மண்ணுக்குள் சிக்கினர். தற்போது வரை அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உள்ளது. 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மண்ணுக்குள் புதைந்த 15 பேர் இன்னும் மீட்கப்படவில்லை.
இந்நிலையில் சம்பவ இடத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது ஆகியோர் உயரதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பினராயி் விஜயன் கூறும்போது “நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு புதிய வீடுகள் கட்டித் தரும். மீட்கப்பட்ட குழந்தைகளின் கல்விச் செலவையும் அரசு ஏற்றுக் கொள்ளும். நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களது மருத்துவச் செலவுகளை அரசு ஏற்கும். நிலச்சரிவு ஏற்பட்டவுடன் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், உள்ளூர் மக்கள் துணிச்சலாக மீட்பு பணியில் ஈடுபட்டது பாராட்டுக்குரியது. அதனால்தான் 12 உயிர்களை காப்பாற்ற முடிந்தது” என்றார்.