

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோல கல்லூரிகளில் இறுதியாண்டு தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
அதேபோல டெல்லி, மகாராஷ்டிராவில் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் செப்டம்பரில் தேர்வு நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து யுவசேனா, மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின்போது, யுஜிசி தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மாணவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும், யுவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவானும் ஆஜராயினர்.
அப்போது துஷார் மேத்தா கூறும்போது, “யுஜிசி உத்தரவுகளை மீறி கல்லூரி தேர்வுகளை மாநில அரசுகள் ரத்து செய்ய முடியாது. இறுதியாண்டு தேர்வு குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வு நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்” என்றார்.
அப்போது அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, “தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேர்வுகளை எப்படி நடத்த முடியும்” என்றார்.
இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். - பிடிஐ