கரோனா விவகாரத்தை கையாள்வதில் மத்திய அரசு முடிவுகளில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

கரோனா விவகாரத்தை கையாள்வதில் மத்திய அரசு முடிவுகளில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
Updated on
1 min read

ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் உட்பட 6 பேர், மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தொற்றைக்கட்டுப்படுத்தும் விவகாரத்தை மத்திய அரசு சரியாக கையாளவில்லை. இதனால் மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் பெரும் தீங்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு கமிஷன் ஒன்றை நியமிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்று குறித்து கடந்த ஜனவரி மாதமே உலக சுகாதார நிறுவனம் உலகநாடுகளை எச்சரித்தது. ஆனால்,வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சரியான நேரத்திலும் சிறப்பான நடவடிக்கைகளையும் எடுக்க அரசு தவறிவிட்டது.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் அதன் சட்டரீதியான கடமைகளை கடைபிடிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. கடந்த மார்ச் மாதம் தேசிய செயல் படை ஒன்றை மத்திய அரசு நியமித்தது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னர் மத்திய அரசு அந்த அமைப்புடன் ஆலோசனை நடத்தவில்லை. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விஷயத்தில் மத்திய அரசிடம் நிறைய தவறுகள் உள்ளன. இது மக்களின் அடிப்படை உரிமையை மீறியதாகும்.

வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளுக்கு பரிசோதனைகள், கண்காணிப்பு போன்றவற்றை நடத்தவில்லை. இந்த பிரச்சினையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. எனவே, கரோனா வைரஸ் விவகாரத்தில் ஆரம்பம் முதல் மத்திய அரசின் தோல்விகளை விசாரணை நடத்த ஓய்வு பெற்றஉச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் தனிப்பட்ட சிறப்பு கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும்.

இவ்வாறு ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘‘கரோனா வைரஸ் தொற்று போன்ற அவசர காலங்களில் அரசு எடுக்கும் நிர்வாக முடிவுகளில் நீதித் துறை தலையிடக் கூடாது என்று உலகம் முழுவதும் கருத்துள்ளது. மேலும், மத்திய அரசின் நிர்வாக முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, மனுதாரரகள் நினைப்பது போல் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட முடியாது’’ என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in