Published : 14 Aug 2020 08:37 PM
Last Updated : 14 Aug 2020 08:37 PM

கரோனாவை எதிர்கொள்ளும் இந்தியா; உலகம் பாராட்டுகிறது: சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள நீங்கள் அனைவரும் காட்டிய பொறுமையும், அறிவும் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, தொடர்ந்து எச்சரிக்கையாக இருந்து பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன் என இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றியுள்ள உரையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 74வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

என் அன்புக்குரிய சக குடிமக்களே,

வணக்கம்

1. நாட்டின் 74வது சுதந்திர நாளை ஒட்டி, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது, தேசபக்திப் பாடல்களைக் கேட்பது என ஆகஸ்ட் 15ஆம் தேதி உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுதந்திரமான தேசத்தின் குடிமக்களாக நாம் இருக்கிறோம் என்ற விசேஷமான பெருமையை இந்திய இளைஞர்கள் இந்த நாளில் உணர்ந்திட வேண்டும். சுதந்திரமான தேசத்தில் நாம் வாழ வழிவகுத்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை நன்றியுடன் நாம் நினைவுகூர்கிறோம்.

2. நமது சுதந்திரப் போராட்டத்தின் நெறிகள் தான் நவீன இந்தியாவின் அடித்தளமாக உள்ளன. தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது தலைவர்கள், உலகின் பன்முக அம்சங்களை ஒன்றாகப் பிணைத்து தேசத்தின் பொதுவான உத்வேகமாக உருவாக்கியுள்ளனர். அந்நியர்களின் அடக்குமுறை ஆதிக்கத்தில் இருந்து பாரத மாதாவை விடுவித்து, அதன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் ஏற்படுத்த வேண்டும் என்பதில்

அவர்கள் உறுதியாக இருந்தனர். அவர்களுடைய சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளால் இந்தியாவை நவீன தேசமாக அடையாளப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது.

3. சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வழிகாட்டியாக மகாத்மா காந்தி அமைந்தது நமக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். ஒரு சாதுவாகவும், ஓர் அரசியல் தலைவராகவும் இருந்த அவர், இந்தியாவில் மட்டுமே நடைபெறக் கூடிய ஒரு செயல்பாட்டு முறையை உருவாக்கினார். சமூக நெருக்கடிகள், பொருளாதாரப் பிரச்சினைகள், பருவநிலை மாற்றம் என்ற சூழ்நிலைகளுக்கு, காந்தியின் போதனைகளில் இருந்து உலக நாடுகள் தீர்வைக் கண்டுபிடிக்கின்றன. சமத்துவம் மற்றும் நீதி என்பதில் அவர் கொண்டிருந்த தாகம் தான் நமது குடியரசின் மந்திரமாக உள்ளது. காந்திஜியை இளைஞர்கள் மீண்டும் வாசிக்கத் தொடங்கி இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்பான சக குடிமக்களே,

4. இந்த ஆண்டு சுதந்திரத் திருநாள் கொண்டாட்டங்கள் கட்டுப்படுத்தப் பட்டதாக இருக்கும். இதற்கான காரணம் நீங்கள் அறிந்தது தான். அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி, பெருமளவு உயிர்ப்பலிகள் வாங்கியுள்ள மோசமான வைரஸ் பாதிப்பில் உலக நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. நோய்த் தொற்று பரவலுக்கு முன்பு நாம் வாழ்ந்த உலகின் இயல்புகளை இது மாற்றிவிட்டது.

5. மிகப் பெரிய சவால் வரவிருப்பதை முன்கூட்டியே மத்திய அரசு ஊகித்து, உரிய காலத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பாராட்டுக்குரிய விஷயம். இவ்வளவு பரந்த மற்றும் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட ஒரு நாட்டில், இந்தச் சவாலை சமாளிப்பதற்கு மேம்பட்ட மனித முயற்சிகள் தேவைப்படும். அந்தந்தப் பகுதி தேவைகளுக்கு ஏற்ப அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கைகள் எடுத்தன. மக்களும் முழு மனதுடன் ஒத்துழைப்பு அளித்தனர். நமது உறுதியான முயற்சிகள் காரணமாக, நோய்த் தொற்றின் தீவிரத்தை வெற்றிகரமாகக் குறைத்து, நிறைய உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறோம்.

உலகெங்கும் உள்ள நாடுகள் பின்பற்றக் கூடிய முன்மாதிரியாக நமது செயல்பாடுகள் உள்ளன.

6. இந்த வைரஸ் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை முன்களத்தில் நின்று எதிர்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், இதர சுகாதார அலுவலர்களுக்கு இந்த தேசம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக அவர்களில் பலர், தொற்று நோயால் இறந்துள்ளனர். அவர்கள் நமது தேசத்தின் கதாநாயகர்கள். கொரோனாவுக்கு எதிரான போராளிகள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள். உயிர்களைக் காப்பாற்றவும், அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும், வேலை நேரத்திற்குப் பிறகும் அவர்கள் பணியாற்றியள்ளனர். இந்த மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள், பேரழிவு மேலாண்மைக் குழுக்களின் உறுப்பினர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், பொருள் வழங்கு அலுவலர்கள், போக்குவரத்து, ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அலுவலர்கள், சமூகசேவை அமைப்புகள் மற்றும் தாராள மனம் கொண்ட குடிமக்கள் ஆகியோர் துணிச்சலான, தன்னலமற்ற சேவைகளைச் செய்துள்ளனர். பெருநகரங்களும், நகரங்களும் அமைதியாகிவிட்டன, சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் நிவாரணம், தண்ணீர் மற்றும் மின்சாரம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதிகள், பால், காய்கறிகள், உணவு மற்றும் மளிகைப் பொருள்கள், மருந்து மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். நமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

அன்பான சக குடிமக்களே,

7. இந்த நெருக்கடிக்கு இடையில், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் உம்பன் சூறாவளி தாக்கியது. பேரழிவு மேலாண்மைக் குழுக்கள், மத்திய மற்றும் மாநில ஏஜென்சிகளின் உறுதியான செயல்பாடுகள் காரணமாகவும், குடிமக்கள் விழிப்புடன் இருந்ததாலும், உயிரிழப்புகள் குறைந்தபட்ச அளவுக்குள் கட்டுப்படுத்தப்பட்டன. வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில்

வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற பேரழிவுகளின் தாக்குதல் சூழ்நிலையில், துயரத்தில் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்திட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்று சேர்ந்திருப்பது நன்றிக்குரிய விஷயமாக இருக்கிறது.

8. நோய்த் தொற்று காரணமாக ஏழைகள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான காலத்தில் அவர்களுக்கு உதவும் வகையில், வைரஸ் கட்டுப்படுத்தும் முயற்சிகளுடன், நலவாழ்வுக்கான குறுக்கீடுகளும் செய்யப்படுகின்றன. `பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம்" தொடங்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வேலை இழப்பு, குடிபெயர்தல், வாழ்க்கைத் தடங்கல்களின் தாக்கம் ஆகியவை இதன் மூலம் குறைக்கப்பட்டன. கார்ப்பரேட் துறையினர், மக்கள் சமுதாயத்தினர் மற்றும் குடிமக்கள் முழு மனதுடன் அளிக்கும் உதவிகளுடன், பல உதவித் திட்டங்களை அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.

9. யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காக, உதவி தேவைப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் அளிக்கப்படுகின்றன. உலகில் மிகப் பெரிய உணவுப் பொருள் விநியோகக் கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்தியாவில் மாதந்தோறும் 80 கோடி மக்களுக்கு உதவிகள் வழங்கும் திட்டம் 2020 நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குடிபெயர்ந்தவர்கள் நாட்டில் எந்தப் பகுதியிலும் ரேஷன் பொருள்களை வாங்கும் வாய்ப்பை உறுதி செய்திட, அனைத்து மாநிலங்களும் `ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

10. உலகின் எந்தப் பகுதியில் நமது மக்கள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாலும், அவர்கள் நலனைப் பேணும் வகையில், `வந்தே பாரத் திட்டம்' மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சவாலான இந்தச் சூழ்நிலைகளில் இந்தியன் ரயில்வே நிர்வாகம் ரயில் சேவைகளை இயக்கி, மக்கள் மற்றும் சரக்குகள் போக்குவரத்துக்கு உதவியுள்ளது.

11. நமது பலங்களின் மீது உள்ள நம்பிக்கை காரணமாக, கோவிட்-19 பாதிப்புக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் மற்ற நாடுகளுக்கும் நாம் உதவிகள் செய்திருக்கிறோம். மருந்துகள் தேவை என்று பல நாடுகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, துயரமான சமயங்களில் உலக சமுதாயத்திற்கு ஆதரவாக நாம் நிற்போம் என்பதை இந்தியா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. நோய்த் தொற்றை சிறப்பாகச் சமாளிக்க பிராந்திய மற்றும் உலக அளவிலான உத்திகளை உருவாக்குவதில் நாம் முன்னணியில் இருக்கிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினர் பதவிக்கு பெரும்பான்மை ஆதரவுடன் இந்தியா தேர்வு செய்யப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் நம் மீது இருக்கும் நல்லெண்ணத்தின் அத்தாட்சியாக உளளது.

12. நமக்காக நாம் வாழ்வதில்லை, ஒட்டுமொத்த உலகின் நலனுக்காகவும் பாடுபடுகிறோம் என்பது இந்தியாவின் பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்தியாவின் தற்சார்பு என்பது உலகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதோ அல்லது மற்ற நாடுகளிடம் இருந்து இடைவெளி ஏற்படுத்திக் கொள்வதோ கிடையாது. இந்தியா தனது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டு உலகப் பொருளாதாரத்தில் ஈடுபாடு கொண்டிருக்கும் என்பது தான் இதன் அர்த்தம்.

அன்பான சக குடிமக்களே,

13. நமது துறவிகள் நீண்டகாலத்துக்கு முன்பு கூறியதை உலகம் இப்போது தான் உணர்கிறது: உலக சமுதாயம் என்பது ஒரே குடும்பம் - `வசுதேவ குடும்பகம்' என்பதை இப்போது தான் உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. மனிதகுலம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால்களுக்கு எதிராக உலக சமுதாயம் கைகோர்க்க வேண்டிய தருணத்தில், நமது அருகில் உள்ள சிலர் விரிவாக்கம் செய்வது என்று தவறான முயற்சியில் ஈடுபட முயற்சி செய்தார்கள். நமது எல்லைகளைப் பாதுகாப்பதில், தீரம் மிகுந்த நமது வீரர்கள் உயிர்த் தியாகங்கள் செய்தனர். பாரத மாதாவின் அந்த உன்னதமான மகன்கள் தேசத்தின் மரியாதைக்காக வாழ்ந்து, உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். கல்வான் பள்ளத்தாக்கில் உயிர்த் தியாகம்

செய்த அனைவருக்கும் இந்த தேசம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஒவ்வொரு இந்தியரும் நன்றி கூறிக் கொள்கிறோம். அமைதியில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்றாலும், ஆக்கிரமிப்பு முயற்சிகள் எதுவும் நடந்தால் தகுந்த பதிலடி தரும் திறனும் நமக்கு இருக்கிறது என்பதை அந்த வீரர்களின் தீரமான செயல்கள் நிரூபித்துள்ளன. நமது எல்லைகளைப் பாதுகாத்து, உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்திருக்கும் ஆயுதப்படை ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் குறித்து நாம் பெருமை கொள்கிறோம்.

14. கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளைப் பொருத்தவரை உயிரும், வாழ்வாதாரமும் முக்கியமானவை என்று நான் நம்புகிறேன். அனைவருடைய நன்மைக்கும் உகந்தவாறு பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டுவதற்கான சீர்திருத்தங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்பை இந்த சூழ்நிலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. குறிப்பாக விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்குப் பயன் கிடைக்கும் வகையில் சீர்திருத்தங்கள் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண்மைத் துறையில், தடம் பதிக்கும் வகையிலான சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்போது விவசாயிகளின் வர்த்தகத்திற்கு தடைகள் எதுவும் கிடையாது. தங்களுடைய விளைபொருள்களை நாட்டில் எந்தப் பகுதியிலும் நல்ல விலைக்கு அவர்களால் விற்க முடியும். விவசாயிகள் மீதான சில ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வருமானம் பெருகும்.

அன்புள்ள சக குடிமக்களே,

15. 2020-ஆம் வருடத்தில் சில கடினமான பாடங்களை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். மனிதன், தான் இயற்கையின் அதிபதி என்னும் மாயையை கண்ணுக்குப் புலப்படாத வைரஸ் ஒன்று தகர்த்தெறிந்துள்ளது. தன்னுடைய தவறை திருத்திக் கொண்டு இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ மனிதகுலத்துக்கு இன்னும் காலம் கடந்து விடவில்லை என்றே நான் நம்புகிறேன். பருவநிலை

மாற்றத்தைப் போல், இந்தப் பெருந்தொற்றும் அனைவருக்கும் பொதுவான விதியை நோக்கி, உலக சமூகத்தை விழிப்படையச் செய்துள்ளது. எனது பார்வையில், 'பொருளாதாரம் சார்ந்த ஒருங்கிணைத்தலை' விட 'மனிதம் சார்ந்த கூட்டுமுயற்சியே' இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். இந்த மாற்றம் எந்த அளவுக்குப் பெரிதாக நடக்கிறதோ, அந்த அளவுக்கு மனிதகுலத்துக்கு அது நன்மை பயக்கும். பூமியைக் காப்பாற்ற வேற்றுமைகளை மறந்து மனித இனம் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் ஒன்றிணைந்தது என்று நினைவுகூறப்பட வேண்டும்

16. இயற்கை அன்னை முன்பாக நாம் அனைவரும் சமம். வாழ்வதற்கும், வளர்ச்சிக்கும் நாம் சக மனிதர்களைச் சார்ந்தே இருக்கிறோம் என்பதே இரண்டாம் பாடமாகும். மனித சமூகத்தால் உருவாக்கப்பட்ட எந்த செயற்கைப் பிரிவினைகளையும் கொரோனா வைரஸ் கண்டு கொள்ளவில்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்துப் பிரிவுகள், பாரபட்சங்கள் மற்றும் தடைகளைத் தாண்டி நாம் எழ வேண்டும் எனும் நம்பிக்கையை இது வலியுறுத்துகிறது. இரக்கமும், பரஸ்பர உதவியும் இந்திய மக்களால் அடிப்படை லட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. நமது செய்கைகளின் மூலம் இந்த நல்லெண்ணத்தை நாம் இன்னும் பலப்படுத்த வேண்டும். அப்போது தான் நம் அனைவருக்குமான சிறந்த எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும்.

17. சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதலே மூன்றாவது பாடமாகும். கோவிட்-19-க்கு எதிரான போரை பொது மருத்துவமனைகளும், ஆய்வகங்களும் முன்னின்று நடத்துகின்றன. பொது சுகாதாரச் சேவைகள் பெருந்தொற்றை சமாளிக்க ஏழைகளுக்கு உதவியுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி, வலுப்படுத்த வேண்டும்.

18. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றியது நான்காவது பாடமாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான தேவையை இந்த பெருந்தொற்று

வலியுறுத்தியுள்ளது. பொதுமுடக்கத்தின் போதும் மற்றும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதும், ஆளுகை, கல்வி, தொழில், அலுவலகப் பணி மற்றும் சமூகத் தொடர்பு ஆகியவற்றுக்கு தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் திறன்வாய்ந்த கருவியாகத் திகழ்ந்தது. உயிர்களைக் காப்பாற்றுதல், பிற செயல்பாடுகளை மீண்டும் தொடங்குதல் ஆகிய இரட்டை நோக்கங்களை அடைய அது உதவியது.

19. இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அலுவலகங்கள் தங்களது பணிகளைச் செய்ய மெய்நிகர் ஊடகத்தை விரிவாகப் பயன்படுத்துகின்றன. நீதி வழங்குவதற்காக மெய்நிகர் நீதிமன்ற நடவடிக்கைகளை நீதித்துறை நடத்துகிறது. மெய்நிகர்க் கூட்டங்களை நடத்துவதற்கும், இன்னும் பல நடவடிக்கைகளுக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் கூட நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறோம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் மின்-கற்றலுக்கும், தொலைதூரக் கற்றலுக்கும் ஊக்கமளித்துள்ளன. வீட்டிலிருந்து வேலை செய்வது பல்வேறு துறைகளில் பொது விதியாகவே ஆகிவிட்டது. பொருளாதாரத்தின் சக்கரத்தைச் சுழல வைப்பதற்காக அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் சில, அதிக நேரம் வேலை செய்வதற்கு தொழில்நுட்பம் உதவுகிறது. இப்படியாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வது ஆகியவை நமது வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் உதவும் என்னும் பாடத்தை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

20. இந்தப் பாடங்கள் மனிதகுலத்துக்குப் பயன்தரக்கூடியவையாக இருக்கும். இளைய தலைமுறையும் இந்தப் பாடங்களைக் கற்றுக் கொண்டிருப்பதால், இந்தியாவின் எதிர்காலம் அவர்களின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன். இது நம் அனைவருக்கும், அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு, கடினமான காலமாகும். கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது நமது சிறுவர் சிறுமியர்களின் கனவுகளையும், ஆசைகளையும் தற்காலிகமாகத்

தடுத்து, அவர்களிடையே கவலையை உண்டாக்கியிருக்கும். இந்த கடினமான காலம் அதிக நாட்கள் இருக்காது என்றும், கனவுகளை நோக்கி முன்னேறுவதை அவர்கள் விட்டுவிட வேண்டாம் என்றும் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இது போன்ற அழிவுகளுக்குப் பிறகு சமூகங்கள், பொருளாதாரங்கள் மற்றும் நாடுகளைச் சிறப்பாக மறுசீரமைத்த ஊக்கமளிக்கக் கூடிய உதாரணங்கள் கடந்த காலத்தில் நிறைய உள்ளன. நமது நாட்டுக்கும், இளைஞர்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன்.

21. நமது குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் எதிர்காலம் சார்ந்த கல்வியை அளிக்க வேண்டும் என்பதற்காக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் தரம் மிகுந்த கல்வி முறை ஒன்று உருவாகும் என்றும், எதிர்காலச் சவால்களை, வாய்ப்புகளாக மாற்றி புதிய இந்தியாவுக்கு அது வழி வகுக்கும் என்றும் நான் நம்புகிறேன். தங்களது ஆர்வம் மற்றும் திறன்களுக்கு ஏற்றவாறு தங்களது பாடங்களை நமது இளைஞர்கள் தாராளமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவர்களது ஆற்றல்களை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். இத்தகைய திறன்களின் மூலம் நமது வருங்கால சந்ததியினர் வேலைகளைப் பெறக்கூடியவர்களாக மட்டும் இல்லாமல், அடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

22. பரந்து விரிந்த விளைவுகளை உண்டாக்கக்கூடிய கூடிய நீண்டகால லட்சியத்தை புதிய கல்விக் கொள்கை கொண்டுள்ளது. 'ஒன்றிணைப்பு', 'புதுமைகள்' மற்றும் 'நிறுவனம்' என்னும் கலாச்சாரத்தை கல்வித் துறையில் அது வலுப்படுத்தும். இளம் மனங்கள் இயற்கையாக வளர்வதற்கு உதவும் வகையில் தாய்மொழியில் கல்வி கற்பிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொழிகளையும், ஒற்றுமையையும் இது வலுப்படுத்தும். வலுவான நாட்டைக்

கட்டமைக்க இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் முக்கியமாகும். புதிய கல்விக் கொள்கை இந்தப் பாதையில் சரியான பயணமாகும்.

என் அன்புமிக்க சக குடிமக்களே,

23. பத்து நாட்களுக்கு முன்னர் தான், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் கோவில் கட்டுமானம் தொடங்கியது. அனைவருக்கும் அது ஒரு பெருமை மிகுந்த தருணமாகும். நீதி அமைப்பின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து, கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் நாட்டு மக்கள் நீண்ட காலம் காத்திருந்தனர். ராம ஜென்ம பூமி பிரச்சினை நீதித்துறை செயல்பாட்டின் மூலம் தீர்க்கப்பட்டது. தொடர்புடைய அனைவரும் மற்றும் மக்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டு, இந்தியாவின் நெறிமுறைகளான அமைதி, அன்பு மற்றும் அகிம்சையை உலகத்தின் முன்னால் எடுத்துக்காட்டினர். அவர்களது புகழக்கூடிய நடத்தைக்காக அனைத்து சக குடிமக்களையும் நான் பாராட்டுகிறேன்.

அன்புமிக்க சக குடிமக்களே,

24. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது, ஜனநாயகத்துடனான நமது பரிசோதனை நீண்ட காலத்துக்கு நிலைக்காது என பலரும் கணித்தனர். நமது பண்டைய பாரம்பரியமும், வளமிக்க பன்முகத்தன்மையும் நமது அரசியலமைப்பை ஜனநாயகமயமாக்காது என்று அவர்கள் கருதினர். ஆனால் அவற்றை நாம் நமது வலிமைகளாக மாற்றி, இந்தியாவை உலகின் மிகப்பெரிய மற்றும் துடிப்புமிக்க ஜனநாயகமாக்கி இருக்கிறோம். மனிதகுலத்தின் நன்மைக்காக இந்தத் தலைமைப் பொறுப்பை இந்தியா தொடர வேண்டும்.

25. பெருந்தொற்றை எதிர்கொள்ள நீங்கள் அனைவரும் காட்டிய பொறுமையும், அறிவும் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து எச்சரிக்கையாக இருந்து பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

26. உலக சமூகத்துக்கு வழங்குவதற்கு, குறிப்பாக அறிவுசார்ந்த சமூகத்துக்கும், ஆன்மிக மேம்பாட்டுக்கும், உலக அமைதியை ஊக்குவிப்பதற்கும், நம்மிடம் நிறையவே இருக்கின்றன. இந்த உணர்வோடு, அனைவரின் நலனுக்காகவும் நான் ஒரு பிரார்த்தனையை செய்கிறேன்.

सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः।

सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चिद् दु:खभाग् भवेत्॥

இதன் பொருள்:

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்,

அனைவரும் நோய் நொடியின்றி இருக்க வேண்டும்,

புனிதமானவற்றை அனைவரும் காண வேண்டும்,

யாருக்கும் கெடுதல் நேரக் கூடாது.

உலக நன்மைக்கான இந்த பிரார்த்தனையின் செய்தி மனிதகுலத்துக்கு இந்தியாவின் பிரத்யேகப் பரிசாகும்.

27. 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்களுக்கு மீண்டுமொருமுறை நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்தையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் பெற நான் வாழ்த்துகிறேன்.
நன்றி,

ஜெய் ஹிந்த்!

இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x