Last Updated : 14 Aug, 2020 04:04 PM

 

Published : 14 Aug 2020 04:04 PM
Last Updated : 14 Aug 2020 04:04 PM

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்கள் 4 பேரின் உடல்கள் அடுத்த வாரம் இந்தியா வரும்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்

மத்திய வெளியுறுவுத்துறை இணையமைச்சர் வி. முரளிதரன் : கோப்புப்படம்

புதுடெல்லி


ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேரின் உடல், அடுத்தவாரம்தான் தாயகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் வோல்கோகிராட் மாநிலத்தில் உள்ள வோல்கோகிராட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது ஆசிக், மனோஜ் ஆனந்த், ஸ்டீபன், விக்னேஷ் ராமு ஆகிய மாணவர்கள் மருத்துவம் படித்து வந்தனர்.

கடந்த வாரம் சனிக்கிழமை வோல்கா நதிக்குச் சென்ற மாணவர்கள் நான்கு பேரும், எதிர்பாராத விதமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்து போன 4 தமிழக மாணவர்களின் உடல்களையும் தமிழகம் கொண்டுவர, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் தமிழக அரசுக்கும்,மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், இன்று தான் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்கள் 4 பேரின் உடல்களை விரைவாக தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத்துறையை வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளிதரன் பேசியுள்ளார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்களின் உடலை விரைவாக இந்தியா அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ரஷ்யாவின் வோல்கா ஆற்றில் மூழ்கி தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழந்தநிலையில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

மாஸ்கோவில் உள்ள இந்தியத்தூரகத்தில் இதுதொடர்பாக நான் பேசினேன். தமிழக மாணவர்கள் 4 பேரின் உடல் அடுத்தவாரம் தொடக்கத்தில் இந்தியா வந்து சேரும் எனத் தகவல் தெரிவித்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x